Banglore murder

ஒரு வீடு… ஒரு விருந்து… ஏழு கொலைகள்!பெங்களூருவில் நடந்தது ஒரு கொலை அல்ல. ஒரு குடும்பத்தையே அழித்த தொடர் படுகொலை. அதுவும் ஒரே நாளில் நடந்த ஆத்திரக் கொலை அல்ல. 16 நாட்கள்… மூன்று கட்டங்கள்… ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து, சாப்பாடு போட்டு, கொன்று, உடல்களை மலைப்பகுதிகளில் வீசிய திட்டமிட்ட கொடூரம் என்கிறது போலீஸ்.

இந்தக் கதையின் மையத்தில் இருப்பவன் கொலையாளி கொடூரன் – வாடகை கார் ஓட்டுநர் இந்துசேகர் 

அவனுக்கும் சுனிதாவுக்கும் 2006-ல் திருமணம். பெங்களூரு ராஜாஜிநகர், ஸ்ரீராமபுரம், பாஷ்யம் சர்க்கிள் அருகே 59-வது கிராஸில் வாடகை வீட்டில் வசித்து வந்தான் அவன். அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டு கால தாம்பத்யம். கடந்த 8 ஆண்டுகளாக அதே வீடுதான் அவனது வாழ்க்கை.

கொலைக்கான பின்னணியாக போலீஸ் சொல்வது இதுதான்: மனைவி சுனிதா மீது சந்தேகம். அவர் தன் பிறந்த வீட்டுடன் மிக நெருக்கமாக இருந்தது குறித்த வெறுப்பு. பிறந்த வீட்டார் அவருக்கு ஆதரவாக நிற்பது குறித்த ஆத்திரம். அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த பழிவாங்கும் எண்ணம். இவை எல்லாம் சேர்ந்து 20 ஆண்டுகளாக மனதுக்குள் கனன்று கொண்டிருந்த தீ என்கிறது போலீஸ் விசாரணை.

அது ஒரு நாள் வெடித்ததா? இல்லை, போலீஸ் சொல்கிறது – இது திடீரென நடந்தது இல்லை. திட்டமிட்ட செயல்.

கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் அதையே சொல்கிறார்: “சொத்து பிரச்சினையா, மனநலம் சம்பந்தமா என உறுதி செய்யவில்லை. ஆனால் திடீரென நடந்தது இல்லை.”என்கிறார் 

மூன்று கட்டங்களில் ஏழு பேர் எப்படி காணாமல் போனார்கள்?

இதையும் படியுங்க  38-க்கு சளித்துப்போன 49..! "அம்மா ஊருக்குப் போயிருக்கா..!" கள்ளக் காதலில் கொடூர ட்விஸ்ட்..!

பலியானவர்கள் ஏழு பேரும் அவனது மனைவி  சுனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்:

சுனிதா (40) – மனைவி

ரூபாவதி (65) – மாமியார், சுனிதாவின் அம்மா

சிவகுமார் (42) – மைத்துனர்

திவ்யா (36) – சிவகுமாரின் மனைவி

சங்கர் (32) – மைத்துனர்

நளினி (32) – சங்கரின் மனைவி

புனீத் (7) – சங்கர் – நளினி தம்பதியின் மகன்

முதல் கட்டம் – அக்டோபர் 16: சுனிதா, மாமியார் ரூபாவதி.

இரண்டாம் கட்டம் – அக்டோபர் 24-25: சிவகுமார், திவ்யா, மகன் புனீத்.

மூன்றாம் கட்டம் – அக்டோபர் 31 – நவம்பர் 1: சங்கர், நளினி.

ஒவ்வொரு முறையும் ஒரே ‘ஃபார்முலா’. “விருந்துக்கு வாங்க” என்று அழைப்பு. வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு, மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயக்கம் அடைய வைத்து, பிறகு ஆட்டுக்கல்லால் தாக்கியிருக்கிறான் அவன். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டி.வி. சத்தமாக வைக்கப்பட்டது. கொலைக்குப் பிறகு கெமிக்கல் போட்டு வீடு கழுவப்பட்டு விட்டது. உடல்கள் 10 அடுக்கு டேப், பிளாஸ்டிக் பை, கோணிப்பையில் கட்டப்பட்டு, வாசனை திரவியம் தெளிக்கப்பட்டு, காரில் ‘PRESS’ ஸ்டிக்கர் ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு கடத்தப்பட்டு மலைகளில் வீசி விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான் அவன் என்பது போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்.

உடல்கள் வீசப்பட்ட இடங்கள் – கர்நாடக நந்தி மலை, சாமுண்டி மலை, சிராடி காட், தமிழ்நாடு ஏற்காடு காட் என பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன.

இதையும் படியுங்க  புவி வெப்ப மாறுதலால் புதிய ஏரிகள் உருவாக்கம் இந்தியா போன்ற நாடுகள் இயற்கை பேரிடரில் சிக்கும்  விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை..!

வழக்கு உடைந்தது எப்படி?

இரண்டு சின்ன விஷயங்கள் அவனை மாட்டிவிட்டன.

ஒன்று: சங்கர் போனில் இருந்து கன்னடத்தில் வந்த பதில். சங்கர் வழக்கமாக அப்படி அனுப்ப மாட்டார். உறவினர்களுக்கு சந்தேகம் வந்தது.

இரண்டு: நவம்பர் 3-ல் நளினியின் அம்மா துங்கம்மா கொடுத்த காணாமல் போன புகார். அதன் பிறகு டவர் டேட்டா மூலம் டிரேஸ் செய்து நவம்பர் 4-ல் அவன் கைது செய்யப்பட்டான்.

மூன்று தனிப்படைகள் தேடல் நடத்துகின்றன. வழக்கை ACP மேற்பார்வையிடுகிறார்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சி, சங்கர் – நளினி தம்பதியின் மூத்த மகன், 11 வயது, 5-ம் வகுப்பு மாணவன். அக்டோபர் 30-ல் பெற்றோருடன் விருந்துக்கு வந்தவன். அவன் சொன்ன வாக்குமூலம் தான் இந்த வழக்கின் மிகவும் நெஞ்சை உலுக்கும் பகுதி:

“சாப்பிட்டு அம்மா பக்கத்தில் தூங்கினேன். காலையில் எழுந்தால் அப்பா இல்லை. அம்மாவுடன் கிளம்ப முயன்றபோது அக்கா உள்ளே இழுத்தார். அம்மா கத்தும் சத்தம் கேட்டது. பிறகு மாமா என்னை வெளியே அழைத்துச் சென்றார்.”

அடுத்த 5 நாட்கள் அவன் இந்துசேகருடனேயே இருந்திருக்கிறான். குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா, சிருங்கேரி, ஏர்போர்ட் என சுற்றியிருக்கிறார்கள்.

“காரில் 4 கோணிப்பைகள் இருந்தன. தொட முயன்றபோது மாமா இந்துசேகர் திட்டினார். துர்நாற்றம் வீசியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அந்த பைகள் வீசப்பட்டன” என்றிருக்கிறான் அந்த சிறுவன்.

6 மொபைல்கள் கருப்பு பையில் இருந்தன. சிறுவனை வைத்தே “அகில இந்திய சுற்றுலா போயிருக்கோம்” என வாய்ஸ் நோட் அனுப்ப வைத்ததாக போலீஸ் சொல்கிறது. அடுத்த இலக்காக சிறுவன் இருந்திருக்கலாம் என்பது போலீஸ் சந்தேகம். நவம்பர் 4-ல் மீட்கப்பட்டதால் தடுக்கப்பட்டது.

இதையும் படியுங்க  கதிகலங்கிய கடலூர்.. அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்.. ரவுடியை ரவுண்ட் கட்டிய போலீஸ்.. யார் இந்த கோபி?

மகளுக்கும் தொடர்பா?

இந்த வழக்கில் இன்னொரு அதிர்ச்சி – அவனின் 17 வயது மகள்.

ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தந்தைக்கு உதவியதாக போலீஸ் சந்தேகிக்கிறது. அவர் உடந்தையாக இருந்தாரா, அல்லது பயத்தில் அமைதியாக இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

இதுவரை கிடைத்தது என்ன?

இதுவரை கிடைத்தது 3 உடல்கள் மட்டுமே.

புனீத் – நந்தி மலை. தலையில் மழுங்கிய ஆயுதத்தால் காயம் என முதற்கட்ட தகவல்.

சுனிதா, ரூபாவதி – ஏற்காடு. நவம்பர் 7-ல் ஏற்காடு மலைப்பாதை கொண்டை ஊசி வளைவு அருகே பள்ளத்தில் 2 உடல்கள் கிடைத்தன. உடல்கள் முழுமையாக அழுகிய நிலையில் இருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

மீதம் 4 பேர் – சிவகுமார், திவ்யா, சங்கர், நளினி. ஹாசன், சிக்கமகளூரு பகுதிகளில் தேடுதல் நடக்கிறது. கொலைக் கொடூரன் இந்துசேகர் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறான்.

முடிவு இல்லாத ‘ஏன்?’

சந்தேகம், குடும்பத் தகராறு, பழிவாங்கும் எண்ணம் – இவை எல்லாம் போலீஸ் சொல்லும் காரணங்கள். ஆனால், ஒரு மனிதன் எப்படி தன் மனைவி, மாமியார், மைத்துனர்கள், அவர்களின் மனைவிகள், 7 வயது குழந்தை என ஏழு பேரை ஒவ்வொருவராக கொல்ல முடிந்தது? அந்த 16 நாட்களில் ஒரு முறை கூட அவன் மனம் மாறவில்லையா? அந்த ‘ஏன்’ என்ற கேள்விக்கு இன்னும் முழு பதில் இல்லை…! அடுத்தடுத்த விசாரணையில் வெளியாகலாம்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *