தமிழகத்தில் நேரடி அரசுப் பணி நியமனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், இனி புதிதாக மேற்கொள்ளப்படும் நேரடி அரசுப் பணி நியமனங்களில், தகுதியுடைய தமிழ் வழிக் கல்வி பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த முன்னுரிமையைப் பெறும் விண்ணப்பதாரர், 1-ஆம் வகுப்பு முதல் அந்த அரசுப் பணிக்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி வரையிலும் முழுமையாக தமிழ் வழியிலேயே கல்வி பயின்றிருக்க வேண்டும். அந்தக் கல்வித் தகுதி SSLC, HSC, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பாக இருக்கலாம்.
பிற மொழிகளைப் பயிற்றுமொழியாகக் கொண்டு கல்வி பயின்றுவிட்டு, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த 20 சதவீத முன்னுரிமைக்குத் தகுதியுடையவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டம் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது, கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சில முக்கிய மாற்றங்கள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கிய சட்டத் திருத்தத்திற்கே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, இந்த முன்னுரிமை புதிதாக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தங்களது அடுத்தடுத்த பதவி உயர்வுகளுக்காகவோ அல்லது வேறு பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் செல்லவோ, இதே தமிழ் வழிக் கல்வி முன்னுரிமையை மீண்டும் பயன்படுத்த முடியாது. அதேநேரத்தில், உயர்ந்த ஊதிய விகிதம் கொண்ட பதவிக்கு செல்லும் வாய்ப்புகள் தொடர்பான விதிவிலக்குகள் தொடரும்.
மேலும், 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ் வழிக் கல்வி முன்னுரிமையின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்தவர்களின் தற்போதைய நியமனங்கள் செல்லுபடியாகும். புதிய சட்டத் திருத்தம் காரணமாக ஏற்கனவே பணியில் உள்ளவர்களின் வேலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள், தமிழ் வழியில் படித்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உள்ளிட்ட நேரடி நியமனத் தேர்வுகளில் உயர் பதவிகளுக்குச் செல்வது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், அரசு வேலை இல்லாத புதிய விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை சட்டப்பூர்வமாக அமல்படுத்தும் வகையில் தற்போது இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ் வழிக் கல்வி முன்னுரிமையைப் பயன்படுத்தி ஒருமுறை மாநில அரசுப் பணியில் சேர்ந்தவர், அதே முன்னுரிமையைப் பயன்படுத்தி வேறு துறை அல்லது மற்றொரு அரசுப் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
மேலும், தமிழ் வழிக் கல்வி பயின்றதற்கான தகுதியை நிரூபிக்க, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயின்ற ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும், அந்த நிறுவனத்தில் பயிற்றுமொழி தமிழ் என்பதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் போலியான சான்றிதழ்களைப் பயன்படுத்தி முன்னுரிமை பெறுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடைநிலைக் கட்டங்களில் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் மற்றும் இரவு நேரப் பள்ளிகள் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்று தகுதி பெற்றவர்களுக்கும், விதிகளுக்கு உட்பட்டு இந்த முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத் திருத்தம், TNPSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, யார் உண்மையான தகுதியுடையவர்கள் என்பதில் தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில், தமிழ் வழியில் கல்வி பயின்று, இதுவரை அரசுப் பணியில் சேராத தகுதியான புதிய விண்ணப்பதாரர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை கிடைப்பதை இந்தச் சட்டத் திருத்தம் உறுதி செய்கிறது.
