சென்னையின் எதிர்கால தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சித் தேவைகளைச் சமாளிக்க, இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கண்டிப்பாக அவசியம் என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்தியத் தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் கோரிக்கை அல்ல என்றும், ஆனால் சென்னையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பது மறுக்க முடியாத அத்தியாவசியத் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், ஆகஸ்ட் 24, 2026 அன்று பரந்தூர் பசுமைவழி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த CII, பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது ஒரு முடிந்துபோன அத்தியாயம் என்றும், அரசு உடனடியாக மாற்று இடத்தைத் தேர்வு செய்து திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வல்லுநர்களின் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, புதிய விமான நிலையத்துக்கு ஏற்ற இடத்தை மிக விரைவாகத் தேர்வு செய்து இறுதி செய்ய வேண்டும். அதன்பின்னர் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என்றும் CII கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையின் பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை தற்போது விமானப் பயணிகள் போக்குவரத்தில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுடன் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது. அண்டை நகரங்கள் தங்களது விமான நிலைய உள்கட்டமைப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் நிலையில், சென்னையில் புதிய விமான நிலையத் திட்டம் தாமதமாவது முதலீடுகளை ஈர்ப்பதிலும் தொழில் வளர்ச்சியைத் தக்கவைப்பதிலும் நகரத்தின் போட்டித்தன்மையைப் பாதிக்கக்கூடும் என CII எச்சரித்துள்ளது.
புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை இடைக்கால ஏற்பாடாக, தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்தி 5-வது முனையத்தை (Terminal 5) அமைக்கும் அரசின் முடிவை CII வரவேற்றுள்ளது. சர்வதேச விமானங்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் தற்போதைய வசதிகளை மேம்படுத்துவதுடன், சரக்குக் கையாளும் திறனையும் (Cargo handling) அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, சுமார் ரூ.20,000 கோடி முதல் ரூ.27,000 கோடி மதிப்பீட்டில், 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. திட்டம் கைவிடப்படுவதற்கு முன்பாகவே சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்ததுடன், நில உரிமையாளர்களுக்கு மும்மடங்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முதற்கட்ட அனுமதியுடன், திட்டத்தை 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே விளைநிலங்களையும், வாழ்விடங்களையும் இழக்க நேரிடும் எனக் கூறி, பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், தேர்வு செய்யப்பட்ட பகுதியில் அதிகளவில் நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஓடுபாதை அமைப்பதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பரந்தூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டாலும் சென்னைக்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் தேவை நீடிக்கிறது என்று CII வலியுறுத்தியுள்ளது.
புதிய இடத்தை விரைந்து தேர்வு செய்து, திட்டத்தைத் தாமதமின்றி செயல்படுத்துவதே சென்னையின் எதிர்கால தொழில், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளது.
