சமூக ஊடகங்களில் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவோரை குறிவைத்து மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லைக்குகள், ஃபாலோயர்களை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி, மோசடி நபர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் மர்ம நபர்கள், செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்வதாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ அல்லது அவர்களது நண்பர்கள், உறவினர்களுக்கோ அனுப்பி, பணம் தராவிட்டால் இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி ஆன்லைன் பிளாக்மெயில் செய்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் புகைப்படங்களை திருடி, அவர்களது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான Facebook, Instagram கணக்குகளை தொடங்கும் மோசடி கும்பல்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி பணம் பறிக்கவும் முயற்சிக்கின்றனர்.
அதேபோல், ஒருவர் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கும் இடங்கள் மூலமாகவே அவரது வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை மர்ம நபர்கள் கண்டறியும் அபாயமும் உள்ளது. இதனால், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிரும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Instagram, Facebook உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை ‘Public’ ஆக வைப்பதை தவிர்த்து, ‘Private Account’ ஆக மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டுமே பதிவுகளைப் பார்க்கும் வகையில் தனியுரிமையை பாதுகாக்க முடியும். மேலும், தெரியாத நபர்களிடமிருந்து வரும் Friend Requests-ஐ ஏற்றுக்கொள்ளக் கூடாது.
ரீல்ஸ் வீடியோக்களில் Live Location, வீட்டு முகவரி, வாகன பதிவு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆயுதங்களுடன் அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஒருவேளை இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தாலோ அல்லது மிரட்டலுக்கு ஆளானாலோ பயப்பட வேண்டாம். உடனடியாக மத்திய அரசின் சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம்.
மோசடி நபர்கள் அனுப்பிய சாட்டிங் பதிவுகள், தொலைபேசி எண்கள், சமூக ஊடகக் கணக்கு விவரங்கள், வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் பணப் பரிமாற்ற விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை போலீசாரிடம் வழங்குவதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வத்தில், தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிர்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை மாற்றியமைக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே சைபர் கிரைம் போலீசாரின் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது.
