நடிகர் சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.74.47 கோடிக்கும் மேல் வசூலித்து, ரூ.100 கோடி வசூல் கிளப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை வசூலில் முந்தைய நாளைவிட 45 முதல் 56 சதவீதம் வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.15.35 கோடி நெட் வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ.22.25 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்ற பெருமையை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் படங்களுக்கு தமிழ்நாட்டிற்கு இணையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் இருக்கும் வரவேற்பு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.18.40 கோடி வசூலித்துள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.16.28 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், கார்த்தியின் ‘கருப்பு’ திரைப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூலான ரூ.28.93 கோடியை, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரூ.31.51 கோடி வசூலித்து முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத் எதிர்கொள்ளும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் காதல் திருப்பங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
படத்தில் சூர்யா தொழிலதிபராக மட்டுமின்றி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரராகவும் நடித்துள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதேபோல், 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி என்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யா, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சஞ்சய் விஸ்வநாத்’ என்ற பெயரில் மீண்டும் பணக்கார கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
சுமார் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரூ.215 கோடிக்கும் மேல் பிரீ-ரிலீஸ் பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தின் ஓடிடி உரிமையை ரூ.85 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, படத்தின் வெற்றி குறித்து பேசிய சூர்யா, ஒரு திரைப்படத்தின் வெற்றியை டிக்கெட் மற்றும் வசூல் கணக்குகளால் மட்டும் அளவிட முடியாது என தெரிவித்துள்ளார். படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் என்ன உணர்வுடன் செல்கிறார்கள், அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணர்வுகள் என்ன என்பதுதான் தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சினிமாவுக்கு வியாபாரமும் பணமும் முக்கியம் என்பதை மறுக்க முடியாது என்றாலும், ஒரு நல்ல திரைப்படம் மக்களின் மனநிலையை மாற்றுவதும், பல ஆண்டுகள் கழித்தும் அந்தப் படம் குறித்து அவர்கள் பேசுவதும்தான் ஒரு கலை வடிவமாக சினிமாவின் மிகப்பெரிய வெற்றி என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
பாசிட்டிவ் விமர்சனங்களுடனும் குடும்ப ரசிகர்களின் ஆதரவுடனும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் இப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.
