இந்தியாவின் சுதந்திரத்தை நாம் இன்று சுகமாக அனுபவிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே அரசு நிகழ்வுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகின்றனர். ஆனால், சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த பலரும் வரலாற்றில் மட்டுமல்ல… நமது நினைவுகளிலிருந்தும் மறக்கடிக்கப்பட்டுள்ளனர்.
அத்தகைய மறக்கப்பட்ட தலைவர்களில் ஒருவரான பொதுவுடைமைவாதி, ‘ஜீவா’ என்று அழைக்கப்படும் தோழர் பி. ஜீவானந்தத்தின் சிலை, வாணியம்பாடியில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படும் இடத்தில் வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தியக் கொள்கையில் ஈர்ப்பு
யார் இந்த ஜீவானந்தம் ? 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள பூதப்பாண்டியில் பிறந்தவர் ஜீவானந்தம். குலதெய்வத்தின் பெயரான அவரது இயற்பெயர் சொரிமுத்து என்பதாகும். பின்னாளில் “ஜீவானந்தம்” என அழைக்கப்பட்டார்.
தனித்தமிழ் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அவர், ஒரு கட்டத்தில் தனது பெயரை ‘உயிர் இன்பன்’ என மாற்றிக்கொண்டார்.
சிறுவயது முதலே காந்தியக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஜீவானந்தம், சிராவயலில் காந்தி ஆசிரமம் ஒன்றை நிறுவியவர் அந்த ஆசிரமத்திற்கு ‘மகாத்மா காந்தி’ வர வேண்டும் என விரும்பி அழைப்பு விடுத்தார்.

காந்தியும் அவரது அழைப்பை ஏற்று ஆசிரமத்திற்கு வந்து, அங்குள்ள பணிகளைப் பார்வையிட்டார் . அப்போது காந்தியடிகள், “ஜீவானந்தம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” எனக் கேட்டதற்கு அதற்கு ஜீவா, “இந்த தேசம்தான் என் சொத்து” எனப் புன்னகையுடன் பதிலளித்தார்
ஜீவாவின் பதிலைக் கேட்டு வியந்த காந்தியடிகள், “ஜீவா, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்று பாராட்டியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பெரியாருடன் நட்பு… கம்யூனிசத்தை நோக்கிய பயணம்
ஒரு காங்கிரஸ் மாநாட்டில் பெரியாருடன் ஜீவானந்தத்திற்கு நட்பு ஏற்பட்டது. அதன் பின்னர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரைப் பின் தொடர்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில், பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இதற்காக ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. சிறையில் அவர் கடுமையான இன்னல்களை அனுபவித்தார்.

ஜீவானந்தத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக அவரது மேடைப் பேச்சு விளங்கியது. அவரது பேச்சைக் கேட்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். அவரது உரைகள் மக்களிடையே இந்திய விடுதலை உணர்வை விதைத்தன.
இதைக் கவனித்த ஆங்கிலேய அரசு, அவரது பேச்சுக்கு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி கோட்டையூரில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார். இதையடுத்து அவரைக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்தபோது கம்யூனிஸக் கொள்கைகளைக் கொண்டவர்களின் நட்பு அவருக்குக் கிடைத்தது. கம்யூனிசம் குறித்த நூல்களை தொடர்ந்து படித்த ஜீவானந்தத்தின் அரசியல் பாதை, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கித் திரும்பியது.
தொழிலாளர்களுக்காக போராடிய ஜீவா
தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, அவர்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திய ஜீவானந்தம், பல்வேறு போராட்டங்களுக்கு நேரடியாகத் தலைமை வகித்தார். போராட்டங்களின்போது தாக்குதல்களையும் சந்தித்தார்.
இரண்டாம் உலகப்போருக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டிப் போராடியதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் தனது போராட்டங்களைத் தொடர்ந்ததால், சென்னை மாகாணத்தைவிட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதாகக் வரலாற்று கட்டுரையில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறையும் ஏவப்பட்டதால், ஜீவானந்தம் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.
1946ஆம் ஆண்டு நடைபெற்ற கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக, ஜீவானந்தம் தலைமையில் தொழிலாளர்கள் பேரணி சென்றனர். அப்போது காவல்துறையினர், “பேரணி சென்றால் சுடுவோம்” என எச்சரித்ததனர்
அதற்கு அஞ்சாமல், “தைரியமிருந்தால் சுடு” என்று கூறி தன் மார்பைத் திறந்து காட்டியபடி முன்னேறிச் சென்றவர் ஜீவானந்தம்
எளிமையான வாழ்க்கை
1947 – ஆம் ஆண்டு பத்மாவதியை சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்ட ஜீவானந்தம், தனது இறுதிக்காலம் வரை தாம்பரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட குடிசையிலேயே எளிமையாக வாழ்ந்து வந்தார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடி சிறைக் கொடுமைகளை அனுபவித்த ஜீவானந்தம், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் தனது கொள்கைகளுக்காக தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனது வாழ்நாளில் சுமார் 10-ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளிலும் காவல்துறைக் காவலிலும் கழித்தவர், சாதி, மத வேறுபாடுகள் மற்றும் மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடினார்
இத்தகைய போராட்டத் தலைவரின் சிலை வாணியம்பாடியில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் இடத்தில் கிடப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
“சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்”
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை முன்னாள் மாநிலத் தலைவர் ஜே. அஸ்லம் பாஷா கூறுகையில்:

“வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக சிலையை தற்காலிகமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக சிலையை கழிவுப் பொருட்கள் வீசப்படும் இடத்தில் வைக்க வேண்டுமா? இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை சிலையை நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். பின்னர் பணி முழுமையாக நிறைவடைந்ததும், சிலையை புதுப்பித்து அதே பகுதியில் மீண்டும் நிறுவ வேண்டும். மேலும், அந்தப் பகுதிக்கு ‘தோழர் ஜீவானந்தம் சர்க்கிள்’ என பெயர் சூட்ட வேண்டும்” என்றார்.
120 – ஆவது பிறந்தநாள்
வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தோழர் ஜீவானந்தத்தின் 120-ஆவது பிறந்தநாள் வருகிறது. இந்த நிலையில், கழிவுப் பொருட்கள் வீசப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்த அதே இடத்தில் மீண்டும் நிறுவி, உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

சுதந்திரப் போராட்டத்திலும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும், சாதி-மத வேறுபாடுகள் மற்றும் மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் ஜீவானந்தத்தின் நினைவை மதிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
