”முதல்வர் மாறியதும் முதலீடும் மாறியது! 17–வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு! புள்ளி விவரத்தால் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்” என்கிற தலைப்பில் முரசொலி நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில், ‘உள்கட்டமைப்பு, வணிகச் சூழல், வளங்கள், நிதி நிலைத்தன்மை என முதலீடுகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களிலும் தமிழ்நாட்டின் தரத்தையும் சூழலையும் தேசிய சராசரிக்கும் மேல் உயர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசு. முதலீடுகளைஈர்ப்பதற்கான களமாக தமிழ்நாட்டைமாற்ற மேற்கொண்ட 5 ஆண்டு கால அயராத முயற்சியால்தான் உள்கட்டமைப்பில் நம்பர் ஒன் மாநிலம் என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டில், அதாவது, முந்தைய காலாண்டில் 58 தனியார் திட்டங்கள் உட்பட மொத்தம் 183 திட்டங்கள்தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி ரூ.44,036.71 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அடுத்ததாக முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. இந்த அரசின் முதல் காலாண்டில் 62 தனியார் திட்டங்கள்உட்பட மொத்தம் 121 திட்டங்கள் மூலம் ரூ.11,236.73 கோடி அளவிலான திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
அதாவது, தனியார் முதலீட்டில் 77.63 சதவீதமும், ஒட்டுமொத்த அளவில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 74.48 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, முதலீட்டை ஈர்ப்பதில்கடந்த காலாண்டில் 6வது இடத்தைபிடித்திருந்த தமிழ்நாடு, தற்போதைய ஆட்சியில் 17வது இடம் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், இதேபோன்று கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கேரள முதல்வராக வி.டி.சதீஷன், மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றனர்.
கர்நாடகாவில் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றார். ஆனாலும், புதிய தலைமையின் கீழ் அந்த மாநிலங்கள் வளர்ச்சிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு உட்பட இந்த 4 மாநிலங்களிலும் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் நடந்தது.

கர்நாடகாவில் சித்தராமையா கடந்த ஜூன் 3ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகியதும், புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றார். ஆக, புதிய முதல்வரின் கீழ் நிர்வாகம் முற்றிலும் மாறி விட்டது. 4 மாநிலங்களிலும் புதிய முதல்வர்களின் தலைமையின் கீழ் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தான் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த மாநிலங்களில், முந்தைய காலாண்டை விட அதிக வளர்ச்சியை பெற்றது கேரளம் தான்.
இங்கு வி.டி.சதீஷன் தலைமையில் புதிய அரசு அமைந்ததும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக 16 தனியார் திட்டங்கள் மூலம் ரூ.2,363.38 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1,139.12 சதவீதம் உயர்வாகும். இத்துடன் சேர்த்து மொத்தம் 63 திட்டங்களில் ரூ.12,032.8 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டை விட 294.94 சதவீதம் அதிகம்.
இதற்கு முந்தைய காலாண்டில் பினராயி விஜயன் தலைமையிலான அரசில் 21 தனியார் திட்டங்கள் மூலம் ரூ.190.73 கோடியும், மொத்தம் 83 திட்டங்கள் மூலம் ரூ.3,046.77 கோடி முதலீடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த மாநிலம் 20வது இடத்தில் இருந்து 16 இடத்துக்கு முன்னேறியுள்ளது. கர்நாடகாவில், டி.கே.சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்ற பிறகு புதிய முதலீடு கள் 232.53 சதவீதம் அதிகரித்து ரூ.83,326.36 கோடியாக உள்ளது. மொத்தம் 400 திட்டங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முந்தைய காலாண்டில் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் மொத்தம் 319 திட்டங்களில் ரூ.25,058.64 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. முதலீடு அதிகரிப்பால் இந்த மாநிலம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 9வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது மொத்த முதலீடு 232.53 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கடந்த காலாண்டில் மொத்தம் 102 திட்டங்களில் 11,350.3 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இதில், ரூ.6,447.54 கோடியிலான 27 திட்டங்கள் தனியார் முதலீடு.
அடுத்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். இதில் மொத்தம் 72 திட்டங்களில் 34,003.65 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இதில் ரூ.33,090.4கோடி மதிப்பிலான 25 திட்டங்கள் தனியார் முதலீடு. முந்தைய மம்தா தலைமையிலான ஆட்சியில்கடந்த நிதி யாண்டின் 4ம் காலாண்டில் பெறப்பட்டதை விட மொத்த முதலீடு 199.58 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் முதலீடு 416.23 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேற்கண்ட 4 மாநிலங்களில், புதிய முதல்வர் தலைமையில் பின்தங்கிப்போனது தமிழ்நாடு தான் என்பதை மேற்கண்ட ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் தனியார் முதலீடு முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் கடந்த காலாண்டில் பெறப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிடுகையில் தனியார் முதலீடு 77.63சதவீதமும், மொத்த முதலீடு 74.48 சதவீதமும் குறைந்ததால், 6 வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேற்கு வங்கம் கர்நாடகத்தில் ஈர்க்கப்பட்ட பெரிய முதலீடுகள் தனியார் அமைப்பு வெளியிட்ட மேற்கண்ட காலாண்டு அளவிலான புள்ளிவிவர ஒப்பீட்டு ஆய்வறிக்கையின்படி, விக்ரம் சோலார் நிறுவனத்தின்சோலார் தகடுகள் தயாரிப்புக்கான ரூ..27,000 கோடி முதலீடு மீண்டும் மேற்கு வங்கத்திற்குள் வந்துள்ளது, முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இது இந்த மாநிலத்தின் காலாண்டுமுதலீட்டில்பெரும்பகுதியாக உள்ளது. இதுபோல், கர்நாடகா மாநிலத்தில் ரூ.16,500கோடி மதிப்பிலான பம்ப் ஸ்டோரேஜ்திட்டம், மற்றும் ஜிண்டால் அலுமினியம் நிறுவனத்தின் ரூ. 6,000 கோடி முதலீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோல், ஹெப்பால் தொடங்கி சென்ட்ரல் சில்க் போர்டு வரை சுரங்கப்பாதை திட்டத்தை ரூ.1,300 கோடியில் செயல்படுத்தும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
