செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது பெயர், புகைப்படம், குரல், உருவம் மற்றும் ஆளுமை உரிமைகள் (Personality Rights) சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி, நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ.15 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது அனுமதியின்றி ஏஐ மற்றும் டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தனது முகத்தைப் போலியாக உருவாக்கி ஆபாச வீடியோக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான காட்சிகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருவதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது அனுமதியின்றி தனது பெயர், புகைப்படம் மற்றும் உருவத்தை பயன்படுத்தி போலி விளம்பரங்கள் (Fake Endorsements) தயாரிக்கப்பட்டதோடு, பல்வேறு வணிகப் பொருட்களும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களில் தனது புகைப்படங்களை பயன்படுத்தி போஸ்டர்கள் மற்றும் பல்வேறு வணிகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முதலில் கண்டறிந்ததாகவும், பின்னர் சமூக வலைத்தளங்களில் தனது முகத்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து ஆபாச மற்றும் போலியான வீடியோக்கள் பரப்பப்படுவதை அறிந்த பிறகே சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட சில போலி வீடியோக்களில், சக நடிகர்களுடன் காதல் உறவில் இருப்பது போன்ற தவறான சித்திரங்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாகவும், இது தனது நற்பெயருக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்ருதி ஹாசன் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை அனுமதியின்றி வெட்டி எடுத்து, அவற்றை GIFகள், டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகளாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது இந்திய காப்புரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 38, 38A மற்றும் 38B-ன் கீழ் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘Performers’ Moral Rights’ எனப்படும் உரிமைகளை நேரடியாக மீறுவதாகவும் அவரது மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 18 எதிர்தரப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், அவரது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறப்படும் மகாலட்சுமி ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் வொர்க்ஸ், பிரபலங்களின் முன்பதிவு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் இணையத்தில் அடையாளம் தெரியாமல் போலி உள்ளடக்கங்களைப் பரப்பிய நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்த போலி வீடியோக்களை வெளியிட்ட சமூக வலைத்தள கணக்குகளை இயக்கும் நபர்களின் அடையாள விவரங்கள் மற்றும் சந்தாதாரர் தகவல்களை (Subscriber Details) சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ருதி ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி எதிர்தரப்பினர் பெற்றுள்ள வருமானம் மற்றும் லாப விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தை வணிக ரீதியிலான வழக்காக (Commercial Suit) பதிவு செய்ய மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை நீதிபதி அஜய் அஹுஜா பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, இணையத்தில் உள்ள சட்டவிரோத உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றுவது, எதிர்காலத்தில் அவரது அடையாளத்தை யாரும் தவறாக பயன்படுத்தாத வகையில் இடைக்காலத் தடை விதிப்பது மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான கோரிக்கைகள் குறித்து, நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்னிலையில் வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வரவுள்ளது.
இதுபோன்ற ஆளுமை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை சமீப காலங்களில் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அனில் கபூர், சுனில் ஷெட்டி உள்ளிட்டோரும் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்களது பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், தனது ஆளுமை உரிமைகள், தனியுரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்துள்ள இந்த சட்ட நடவடிக்கை, திரைப்படத் துறையிலும் டிஜிட்டல் உலகிலும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படுகிறது.
