பழனி தண்டாயுதபாணி கோயில் நில மோசடி வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது அந்த நிலத்தின் அசல் உரிமையாளராகக் கூறப்படும் குப்புசாமி மணியக்காரரின் வாரிசுதாரர்கள், ஒரிஜினல் ஆவணங்களுடன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருப்பது வழக்கில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

1880-களில் அந்த நிலத்தின் உரிமையாளராக இருந்த குப்புசாமி மணியக்காரர், 1882-ஆம் ஆண்டு தர்ம நோக்கத்திற்காக ஒரு தனியார் மடத்திற்கு அந்த நிலத்தை தானமாக எழுதி வழங்கியதாக வாரிசுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 1882 மற்றும் 1888-ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அசல் பத்திரங்கள் மற்றும் மூல ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் தங்களது குடும்ப வாரிசுகளிடமே பாதுகாப்பாக இருப்பதாகவும், அந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது அல்ல என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாரிசுதாரர்கள், அந்த நிலம் முழுமையாக ஒரு தனியார் மடத்திற்கே தானமாக வழங்கப்பட்டதாகவும், அதற்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், எந்த நோக்கத்திற்காக அந்த நிலம் தானமாக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் தர்ம சாஸ்திரத்தின்படி அந்தச் சொத்து மீண்டும் அசல் உரிமையாளரின் வாரிசுகளிடமே திரும்ப வேண்டும் என்ற சட்ட மற்றும் தர்மக் கோட்பாடு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ஏற்கனவே சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சிவில் வழக்கிலும், மடம் செயல்படாத சூழலில் அந்த நிலம் மீண்டும் அசல் உரிமையாளருக்கே திரும்பும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாரிசுதாரர்களின் வழக்கறிஞர்கள் கார்த்திகேயன் மற்றும் கண்ணகி தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிலத்திற்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் எந்த உரிமைத் தொடர்பும் இல்லை என்பதையே சிபிசிஐடி விசாரணையிலும் விளக்கியுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும், தாங்களே உண்மையான வாரிசுதாரர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தேவையான அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தங்களது உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த நிலத்தை மீட்டு தங்களது பெயரில் உரிமை கோருவது தங்களது நோக்கம் அல்ல என்றும், தங்களது மூதாதையரான குப்புசாமி மணியக்காரர் எந்த உயர்ந்த தர்ம நோக்கத்திற்காக அந்த நிலத்தை வழங்கினாரோ, அதே நோக்கம் மீண்டும் நிறைவேற வேண்டும் என்பதே தங்களது ஒரே விருப்பம் என்றும் வாரிசுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பழனி கோயில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட வெள்ளத்துரை, போலி அறக்கட்டளை நிர்வாகியாகக் கூறப்படும் முருகதாஸ் மற்றும் சேதுபதி ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், இரவு முழுவதும் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது, வழக்கின் விசாரணைக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நில முறைகேடு தொடர்பான பதிவுகளில் முறைகேடாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும், நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீனின் அடிப்படையில் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஷாஜிதா மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அஜய் தங்கம் ஆகியோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 82 பேரிடம் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் பலரிடம் விசாரணை தொடரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் பழனி தண்டாயுதபாணி கோயில் நில மோசடி வழக்கு நாளுக்கு நாள் புதிய ஆதாரங்கள், புதிய வாக்குமூலங்கள் மற்றும் புதிய திருப்பங்களுடன் தீவிர விசாரணை கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்தகட்டமாக சிபிசிஐடி விசாரணையில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
