ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண் கீர்த்தி, நிறைவேறாத காதலால் மனவேதனை அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதத்தில் இடம்பெற்றிருந்த வேண்டுகோளும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி, மும்பையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சாய் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மலர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் எட்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவு குறித்து கீர்த்தி தனது குடும்பத்தினரிடமும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சாயின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்த கீர்த்தி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சாயிடம் பலமுறை கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது குடும்பத்தின் விருப்பமே முக்கியம் என்றும், இந்த உறவைத் தொடர முடியாது என்றும் சாய் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மனவேதனை அடைந்த கீர்த்தி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கீர்த்தி எழுதியிருந்ததாகக் கூறப்படும் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அந்தக் கடிதத்தில், தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டிருந்ததுடன், தனது காதலருடன் வாழ முடியாத வேதனையைப் பதிவு செய்திருந்ததாகவும், தனது இறுதிச் சடங்குகள் தொடர்பாக சில விருப்பங்களையும் குறிப்பிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கீர்த்தியின் இறுதி விருப்பத்தை மதிக்கும் வகையில், அவரது உடல் காதலர் சாயின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு, இரு தரப்பினரின் சம்மதம் மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கீர்த்தியின் உடலுக்கு சாய் மாங்கல்யம் அணிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர், அங்கேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இளைய தலைமுறையினர் மனஅழுத்தம், உறவு சிக்கல்கள் அல்லது வாழ்க்கை நெருக்கடிகளை தனியாக எதிர்கொள்ளாமல், குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களின் உதவியை நாடுவது மிகவும் அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
