தமிழக அரசு நிர்வாகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் விஜய். குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ், உணவுப்பொருள் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத் ஐஏஎஸ் ஆகிய இருவரின் திடீர் இடமாற்றம், தலைமை செயலக வட்டாரத்தையும், முதல்வருக்கு நெருக்கமானவர்களையுமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பனையூர் விஐபிகளுக்கே தெரியாத ரூட்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ்-ஐ மாற்ற வேண்டும் என்ற உத்தரவு, முதல்வரின் நேரடிப் பார்வையில் இருந்து தலைமைச் செயலாளருக்கு ரகசியமாகச் சென்றுள்ளது. இந்த உத்தரவு வெளியாகி அருண் மாற்றப்பட்ட பிறகுதான், கோட்டையில் உள்ள முதல்வருக்கு நெருக்கமான உயர் அதிகாரிகளுக்கே விஷயம் தெரியவந்தது எனச் சொல்லப்படுகிறது.

திடீர் மாற்றத்தால் குழப்பமடைந்த அருண் ஐபிஎஸ், தனக்குத் தெரிந்த பனையூரைச் சேர்ந்த முக்கிய விஐபிகளிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதற்கு அவர்களோ, “விஷயம் எங்களுக்கே இப்பதான் சார் தெரியும், பெரிய ஷாக்! சி.எம் நேரடியாக எடுத்த முடிவு இது” எனக் கூறி கைகளைக் விரித்துவிட்டதாகத் தெரிகிறது.
வெயிட்டிங் லிஸ்டில் உமாநாத் ஐஏஎஸ்
இதேபோல், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத் ஐஏஎஸ் மாற்றப்பட்ட விவகாரம் இன்னும் சுவாரசியமானது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட உமாநாத் ஐஏஎஸ்-க்கு, தவெக ஆட்சியிலும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் முதல்வர் விஜய் பெரம்பூருக்கு ஆய்வு செய்யச் சென்றபோது, அங்கு நடைபெற்ற ரேஷன் கடை விழாவில் முதல்வருக்கு மிக அருகில் சிரித்தபடியே உமாநாத் ஐஏஎஸ் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவரை அதிரடியாகக் ‘காத்திருப்புப் பட்டியலுக்கு’ தள்ளி முதல்வரிடம் இருந்து நேரடி உத்தரவு பறந்தது.
₹1,000 கோடி மெகா டெண்டர் புகார்
உமாநாத் ஐஏஎஸ் மீது இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு மெகா புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது. உணவுத்துறையில் பருப்பு கொள்முதல் செய்வதற்கான சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா டெண்டர் ஒன்றை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கே தெரியாமல் உமாநாத் ஓகே செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் ஆதாரங்களுடன் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்ற உடனே, அடுத்த ஒரு மணி நேரத்தில் உமாநாத்தின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தாலும், இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த ஐஏஎஸ் வட்டாரத்தையும் மிரள வைத்துள்ளது.
முக்கிய அதிகாரிகள் மாற்றத்தில் யாருடைய சிபாரிசுகளையும் கேட்காமல் முதல்வர் விஜய் நேரடியாகக் களமிறங்கி காட்டும் இந்த அதிரடி, தவெக அரசின் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
