”நான் அறிந்த வரை சுதந்திரத்திற்கு பிறகு தமிழ் நாட்டில் அமைந்த ஆட்சிகளில் சாணக்கியரின் இந்த அர்த்த சாஸ்த்திர அறிவுரையை மிக அதிகமாக பின்பற்றியது மு.க.ஸ்டாலின் ஆட்சி தான்” என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முக நூல்பதிவில், ”சாஸ்திர சம்பிரதாய முறைப்படியான திருமணம் என்பது திமுக தலைவர்களின் இல்லங்களில் புதிதல்லவே…! துரைமுருகன் செய்ததை இன்று விமர்சிப்பவர்கள் சமீபத்தில் கலைஞரின் மகனும், ஸ்டாலின் தம்பியுமாகிய மு.க.தமிழரசு பீமரத சாந்தி நடத்தியது குறித்து பேசுவதில்லை. ஏனென்றால், இவர்கள் திமுகவின் தலைமை குடுபத்தை மாத்திரம் தங்க பாதாம்பாளத்தில் தாங்குவார்கள்.
இதையும் படியுங்க:-மார்பை அழுத்துவதும், துப்பட்டாவை இழுப்பதும் கற்பழிப்பு ஆகாது..!’ உயர் நீதிமன்றத் தீர்ப்பால் கடுப்பான உச்ச நீதிமன்றம்..!
சில பொதுவான உண்மைகளை பார்ப்போம். கெளடில்யரின் அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டு இருப்பதைத் தான் இந்தியாவில் பல மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கின்றன. ’’பொது மக்களை எப்போதும் முட்டாளாக வைத்திருக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த வழி பொது மக்களை மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவாய்ப்பேற்படுத்தி தருவது தான்… அதற்கு தோதான அந்தணர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் அதே சமயம் அரசன் கடவுள், மதம் சார்ந்தவற்றில் நம்பிக்கை வைக்கக் கூடாது. எந்த அரசன் இதை சிறப்பாக செய்கிறானோ அவனது கஜானா நிரம்பி வழியும்’’ என்கிறார் சாணக்கியர்.

விருப்பு, வெறுப்பில்லாமல் ஒரு யதார்த்ததை நாம் அணுக முடிந்தால், நான் அறிந்த வரை சுதந்திரத்திற்கு பிறகு தமிழ் நாட்டில் அமைந்த ஆட்சிகளில் சாணக்கியரின் இந்த அர்த்த சாஸ்த்திர அறிவுரையை மிக அதிகமாக பின்பற்றியது மு.க.ஸ்டாலின் ஆட்சி தான். இதை சிறப்பாக நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலினுக்கு வாய்த்த தளபதி தான் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.
இதையும் படியுங்க:- நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!
சிலர் நீண்ட நெடிய துயிலில் இருந்து விடுபட்டவர்களாக தற்போது இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு ஆஹா… திராவிட கொள்கை என்னாவது? எனக் கேட்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனான மு.க.தமிழரசு (மு.க.தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி). இவருக்கும் இவரது மனைவி மோகனாவுக்கும் அண்மையில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா நடைபெற்றது. இதை பேசமாட்டார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்ற போர்வையில் நம் மக்களை சனாதனிகள் நிரந்தர அடிமையாக்கி வைத்திருந்ததை சமீபத்திய வரலாற்றில் சமரசமின்றி எதிர்த்து சாதனை புரிந்த பெரியார் வழியில் வந்தவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டே இதனை செயல்படுத்தியதுதான் ஸ்டாலின் அரசின் ஆகப் பெரிய சாதனை என்பதா? சோதனை என்பதா?

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டிலே வேறெந்த துறைகளையும் விட இந்து சமய அறநிலையத் துறை தான் ஜெகத்ஜோதியாக பிரகாசிக்கிறது. பிராமண அர்ச்சகர்கள் காட்டில் அடை மழை பொழிகிறது. இங்கு 100 சதவிகித சனாதனம் சமரசமின்றி அமலானது. சுகாதாரத் துறை தொடங்கி பள்ளிக் கல்வி வரை எல்லா துறைகளிலும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், போராட்டங்கள்.. நடந்து கொண்டிருந்த நிலையில், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை அர்ச்சகர், ஓதுவார், பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத் தொகையும், மாணவர்களுக்கு உயர்ந்தப்பட்ட ஊக்கத் தொகையும் ஆச்சரியப்பட வைத்தன.
அறநிலையத் துறை இந்த ஆட்சியில் அதிர்ஷ்டக்கார துறையாக உள்ளது என்பதை யார் ஏற்கிறார்களோ இல்லையோ.., பார்ப்பன அர்ச்சகர்கள் பரவசமாக ஒத்துக் கொள்கிறார்கள். அர்சகர்கள், ஓதுவார்கள் போன்றோர் எந்த கோரிக்கை வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றி தந்து விடுகிறார்கள். கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்து தமிழக அறநிலையத்துறை 2019ல் தான் அரசாணை வெளியிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் அர்ச்சகர்களின் சம்பளம் பெரிதும் அதிகரிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டே ”கோவில் குடமுழுக்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இணைத்து நடத்துங்கள்” என அதிகாரபூர்வமாக தீர்ப்பு தந்த பிறகும் அதை அமல்படுத்தாமல் நூறு சதவிகிதம் சமஸ்கிருதத்தில் மட்டுமே – அதுவும் பிராமண அர்ச்சகர்களை மட்டுமே -வைத்துக் கொண்டு யாக சாலையிலும், கோவில் கோபுரத்திலும் தமிழ் ஓதுவார்களை புறக்கணித்து நடத்தியது திராவிடமாடல் அரசு.

அடிமைகள் ஆட்சி என்று விமர்சிக்கப்பட்ட சென்ற அதிமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சார்பில் 10 கலைக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டு நான்கு கல்லூரிகள் நடைமுறைக்கு வந்தன. பேராசிரியர் தொடங்கி அனைத்து வேலைகளுக்கும் இந்துக்கள் மட்டுமே என்ற வகையில் செயல்பட்டது. அத்துடன் இதில் சைவ சித்தாந்தம், ஆன்மீகம் போன்ற ஆறுமாத கோர்ஸ் தொடங்கி ஏராளமான மாணவர் சேர்க்கை நடந்தது.
இதையும் படியுங்க:- “பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்தியா?! சிவகங்கை பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!”
இக்கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் முதன்மை நோக்கமே பொருளாதாரத்தில் பின்தங்கிய ( கவனிக்கவும் சமூக தளத்தில் அல்ல) ஏழை எளிய மாணவர்களுக்குக் குறைந்த செலவில் தரமான கல்வி வழங்குவது தான் என அறிவித்த திராவிட மாடல் அரசு கல்வி கட்டணத்தில் இப்படியான மாணவர்களுக்கு முழு விலக்கு அளித்தது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பரிகாரம் செய்ய தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்று (பார்ப்பன) ஜீயர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து பாதபூஜை செய்த போது இன்றைக்கு விமர்சிப்பவர்கள் ஏனோ அமைதி காத்தார்கள்.

பார்ப்பன வேத விற்பன்னர்கள் சென்ற ஆட்சி காலத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து பூஜை, பரிகாரங்கள் செய்து போன புகைப்படங்களும், காணொளியும் அன்று வெளியான போதும் பலர் அமைதி காத்தனர். திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டு, ‘சனாதன மாடல்” அரசை நடத்தி, மக்களை முட்டாள்களாக்க முடியுமென்றால், ’’சமூக நீதி’ ’செக்யூரியலிசம்’ என்று பேசிக் கொண்டு, என்னால் திமுகவை விட சிறப்பான சனாதன ஆட்சி தரமுடியும்” என்று தற்போது ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் அண்ணாமலை துணிந்துள்ளார்.
இந்த பாசாங்கு அரசியலுக்கு பாதை போட்டுத் தந்தது ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தானே! கட்சி, தனிநபர் ஈர்ப்பு என்பதைக் கடந்து நடக்கும் யதார்த்தங்களை உள்வாங்கி உணர்ந்து அரசியலை தீர்மானிக்க மக்கள் பழக வேண்டும்” எனக் கூறியுள்ளார்
சாவித்திரி கண்ணன்.
