சென்னை அம்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 வயது சிறுமியின் உடல், மருத்துவ அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை குறித்த சந்தேகத்தின் பேரில், 8 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது மகள் வி.எஸ். நெஸ்லின்ரியா, கடந்த 2025 டிசம்பர் 3-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக அம்பத்தூரில் உள்ள தேஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால், தகுதி வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்றி மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய் தேஜா ஆகியோர் அலட்சியமாகவும் முறையற்ற வகையிலும் சிகிச்சை அளித்ததால்தான் தங்களது மகள் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் மாப்பேடு அருகேயுள்ள இறையாமங்கலம் கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர், உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெற்றோர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும், அம்பத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், உண்மையான மரணக் காரணத்தைக் கண்டறிய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரை செய்தது.
இதையடுத்து, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டாட்சியர் சரண்யா ஆகியோர் முன்னிலையில், சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் மற்றும் அம்பத்தூர் காவல்துறையினர் முன்னிலையில், மயானத்திலேயே அறிவியல் முறையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் கூறுகையில், குழந்தைக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பரிசோதனைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர். டிரிப் சிகிச்சைக்கு பிறகு காய்ச்சலும் வாந்தியும் குறைந்து குழந்தை உணவு சாப்பிடத் தொடங்கியதால், மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், மாலை நேரத்தில் குழந்தைக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன், உடல்நிலை மோசமடைந்ததாகவும், மருத்துவரை பலமுறை அழைத்தும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர் மீண்டும் டிரிப் செலுத்தப்பட்ட நிலையில், குழந்தை டிரிப்பை அகற்றுமாறு தொடர்ந்து அழுததாகவும், சிறிது நேரத்தில் திடீரென உடலில் அதிர்வு ஏற்பட்டு, பின்னர் மாரடைப்பு (Cardiac Arrest) காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பெற்றோர் கூறினர்.
மேலும், “குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கே தெரியவில்லை” என்று மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மருத்துவ சேவைகள் இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையின் செயல்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், கடைசியாக டிரிப் செலுத்துவதற்கு முன் குழந்தைக்கு எலெக்ட்ரோலைட் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும், குழந்தைகள் நல மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவில் ஏற்பட்ட மாற்றமே மாரடைப்புக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
எனினும், சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது நோக்கம் யாரையும் பழிவாங்குவது அல்ல என்றும், இனி இதுபோன்ற சம்பவம் வேறு எந்தக் குழந்தைக்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
