சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் யூடியூபர் கௌசல்யாவை உடனடியாகக் கைது செய்யக் கோரி, தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
யூடியூபர் கௌசல்யா, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்து பொய்யான, அவதூறான மற்றும் இழிவான தகவல்களைப் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் பெண் அங்கன்வாடி ஊழியர்களின் தனிமனித கண்ணியத்தையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு கடுமையான மனவேதனையும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவதூறான பதிவுகளை வெளியிட்டு வரும் அவரது சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் பக்கங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம், யூடியூபர் கௌசல்யா மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கட்கிழமை மனு அளித்தனர்.
அத்துடன், யூடியூபர் கௌசல்யாவைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
