https://republictn.com/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் த.வெ.க ஆட்சியில், அரசு மருத்துவமனைகளின் அவல நிலை ஒரு பிஞ்சு உயிரைப் பலிவாங்கி இருக்கிறது. அதைவிடக் கொடுமை, இந்த மரண அலட்சியத்தால் அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, த.வெ.க சட்டமன்ற உறுப்பினரே ஓடோடி வந்து பஞ்சாயத்து செய்து குற்றத்தை மறைக்கப் பார்த்திருப்பது கொதித்தெழச் செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளியைச் சேர்ந்த கலைவேந்தன் – ஷாலினி தம்பதியரின் 11 மாதக் குழந்தை ருதிஷாவுக்குக் காய்ச்சல் தீவிரமடைந்தபோது, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், “தலைமை” மருத்துவமனை என்று பெயர் தாங்கிய அந்த இடத்தில் சிகிச்சைக்கான போதிய வசதிகள் இல்லை என்று கூறி, 50 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.

மிகவும் அவசரமான அந்தச் சூழலில், குழந்தையைக் கொண்டு செல்ல ஒரு அரசு ஆம்புலன்ஸ் வசதி கூடச் செய்து தரப்படவில்லை. வேறு வழியின்றி, பெத்த மனம் பதற, தன் 11 மாதக் குழந்தையை இருசக்கர வாகனத்திலேயே வைத்துக்கொண்டு 50 கிலோமீட்டர் தூரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் அந்தத் தந்தை.

வழியில் கெஜல்நாயக்கன்பட்டி அருகே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, அங்கிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அங்கு மருத்துவர் இல்லை. பணியில் இருந்த செவிலியர்களிடம் “என் பிள்ளை மூச்சுவிட முடியாமல் துடிக்கிறது, ஆக்ஸிஜன் வையுங்கள்” என்று கதறியுள்ளனர்.

மின்சாரம் இல்லை… ஆம்புலன்ஸ் இல்லை… மனிதாபிமானமும் இல்லை..! பிஞ்சுயிரைக் குடித்த அரசு மருத்துவமனையின் அலட்சியம்..!

“இப்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. , ஆக்ஸிஜன் வைக்க முடியாது” கரண்ட் வரும் வரை காத்திருங்கள் என செவிலியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர். மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இருந்தும், அதை இயக்கக்கூட மனமில்லாமல் செவிலியர்கள் காட்டிய அந்த அலட்சியத்தால், ஆக்ஸிஜன் கிடைக்காமல் அந்த 11 மாதப் பிஞ்சுத் தளிர் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் மரணத்தால் ஆத்திரமடைந்த பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷயம் காட்டுத்தீயாகப் பரவியது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியம் வெளியே தெரிந்தால், த.வெ.க அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரும், அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவும் ஏற்படும் என்பதை ஆளுங்கட்சித் தரப்பு உணர்ந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, அதுவும் தானும் ஒரு “டாக்டர்” என்று பெருமையோடு போட்டுக்கொள்ளும் எம்.எல்.ஏ திருப்பதி, அங்கு வந்ததும் செய்த காரியம் தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆதரவாக நின்று தவறு செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் போராடியிருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரம் பெரிதாகி விடக்கூடாது என்பதில் மட்டுமே த.வெ.க எம்.எல்.ஏ குறியாக இருந்தார்.

காவல்துறையைத் துணைக்கு வைத்துக்கொண்டு, கதறி அழுதுகொண்டிருந்த பெற்றோரிடம் அவசர அவசரமாகச் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை வாங்கிச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். மரணத்தை விட அரசின் “இமேஜ்” தான் முக்கியமா என்ற கேள்வியே எழாதவாறு, சமரசம் பேசி உடலை ஒப்படைத்துவிட்டுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

“எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்தக் குழந்தைக்கும் நிகழக்கூடாது. காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் பெற்றோர் கதறிய அழுகுரல் அங்கே சூழ்ந்திருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. ஆனால், அதிகார வர்க்கத்திற்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வுக்கும் அந்த அழுகுரலை விட, அரசின் மீது கறை படியாமல் துடைப்பதுதான் முக்கியக் கடமையாகத் தெரிந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை, ஜெனரேட்டர் இருந்தும் இயக்கத் துப்பில்லாத பணியாளர்கள், ஆம்புலன்ஸ் தராத அலட்சியம்… இத்தனைக்கும் நடுவே தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, அதிகாரிகளோடு சேர்ந்து கொண்டு குற்றத்தை அமுக்கப் பார்ப்பது த.வெ.க அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

சிபாரிசுகளுக்கு “நோ” சொல்லி நேர்மையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் விஜய், தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வே அரசுக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிஞ்சுயிரின் மரணத்தை மூடி மறைக்கச் சமரசம் பேசிய இந்தச் சர்ச்சை விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்..?

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago