Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை அம்பத்தூரில் தவறான மருத்துவச் சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சீனு அலெக்சாண்டர் – ரிசா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் இளைய மகளான 5 வயது நெஸ்லினுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மறுநாளான டிசம்பர் 4-ஆம் தேதி சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரில், தகுதியான குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்றி மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய் தேஜா ஆகியோர் மருத்துவ நெறிமுறைகளை மீறி அலட்சியமாக சிகிச்சை அளித்ததால் தங்களது குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படியுங்க  “தூக்கு தண்டனை கைதி விடுதலை வழக்கில் திடீர் திருப்பம் – தமிழக அரசின் முக்கிய நகர்வு”

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிலும் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், பெற்றோர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவக் கவுன்சில் விரிவான விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் ஆய்வில், குழந்தைக்கு செலுத்தப்பட்ட ஊசி (Injection) தொடர்பாக மருத்துவ அலட்சியம் இருந்ததாக உறுதி செய்யப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த சிறுமியின் தாய் அளித்த பேட்டியில், “நாங்கள் காவல் நிலையத்திலும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளோம். குழந்தைக்கு போடப்பட்ட ஊசியில்தான் தவறு இருந்தது என்பது மருத்துவக் கவுன்சில் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உடற்கூறாய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் மருத்துவமனை தரப்பினர் இரண்டு அல்லது மூன்று முறை எங்கள் வீட்டுக்கு வந்து இழப்பீடு வழங்க முன்வந்தனர். வெள்ளைத் தாளில் கையெழுத்திடுமாறும் கேட்டனர்.

இதையும் படியுங்க  "அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே…" கண்ணீரில் நனைய வைத்த மதுரை தந்த தமிழ் அமுதம்..!

ஆனால், அதை நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு நீதி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், எங்கள் குழந்தைக்கு நேர்ந்தது போல வேறு எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற துயரம் நேரக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறோம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் உத்தரவின்படி, திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சிறுமியின் உடல், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அம்பத்தூர் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த சிறுமி உயிருடன் இருந்தபோது ஆடியதாகக் கூறப்படும் “கடைசி நடனம்” தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இதையும் படியுங்க  ”ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு புற்றுநோய்! தமிழ்நாட்டை உலுக்கும் அதிர்ச்சித் தகவல்! சென்னை முதலிடமா?

இந்தச் சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பிறகே இந்த வழக்கில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எந்த திசையில் செல்லும் என்பது தெளிவாகும்

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago