Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் FL3 உரிமம் பெற்ற பப்கள் (Pubs), பார்கள் மற்றும் கிளப்புகளில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் நுழைவதற்கும், மது அருந்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் பிறப்பித்துள்ளார்.

, “21 வயதுக்கு உட்பட்ட நபர்களை எந்த சூழ்நிலையிலும் பப்கள் மற்றும் கிளப்புகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் இருந்தால், ஆதார் அட்டை அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை (ID Proof) சரிபார்த்த பிறகே அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த உத்தரவை மீறி 21 வயதுக்கு உட்பட்டவர்களை FL3 உரிமம் பெற்ற பப்கள் அல்லது கிளப்புகளுக்குள் அனுமதித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் FL3 உரிமம் (Licence) ரத்து செய்யப்படும். இது முதல் மற்றும் கடுமையான எச்சரிக்கை. அனைத்து நிறுவனங்களும் இதை முறையாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் எச்சரித்தார்.

பப்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய FL2 உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

தற்போது செயல்பட்டு வரும் மையங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமங்களின் அடிப்படையில் இயங்கி வருகின்றன. முதலில் இந்தத் துறையை முழுமையாக ஒழுங்குபடுத்துவதே எங்கள் முன்னுரிமை. அதன் பிறகே அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது தொடர்பாகவும் அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகளை வெறும் பெயரளவில் வைப்பது போதாது. அதை நடைமுறையிலும் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் எங்களிடம் வந்துள்ளன.

அதன் அடிப்படையில்தான் இந்த முதல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது. தொடர்ந்து விதிமீறல்கள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

சென்னையில் கள்ளத்தனமாகவும், காலை நேரங்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், “அதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறவில்லை என்ற அறிக்கைகளின் அடிப்படையில்தான் நான் உறுதியாகக் கூறுகிறேன். ஏதேனும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மதுபழக்கத்தை குறைப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “40, 45, 50 வயதில் நீண்ட காலமாக மதுபழக்கத்திற்கு அடிமையானவர்களை ஒரே நாளில் திருத்த முடியாது. அதற்காகத்தான் மறுவாழ்வு மையங்கள் மற்றும் போதை மீட்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் எதிர்கால தலைமுறையினரை காக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுபழக்கத்தின் தீமைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாகும். மதுபழக்கம் தனிநபரின் வாழ்க்கையையும், சமூகத்தையும் பாதிக்கும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாட்டில் சில மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், “இதுகுறித்து யாரும் அதிகாரப்பூர்வமாக எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை.

இருந்தாலும், குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டும் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் நடைமுறையை பரவலாக்குவதே அரசின் நோக்கம். புதிய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது குறித்து உரிய நேரத்தில் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் அருகில் உள்ள மனமகிழ் மன்றங்கள் எப்போது மூடப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதலில் டாஸ்மாக் துறையை முழுமையாக சீரமைப்பதே எங்கள் முன்னுரிமை. ஒரு பணியை தொடங்கினால் அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தப் பணியை முடித்த பிறகு, இந்தத் துறையில் உள்ள மற்ற பிரச்சினைகளையும் கட்டம் கட்டமாக தீர்ப்போம். நுகர்வோரின் பணம் யாராலும் முறைகேடாக பயன்படுத்தப்படாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

Eswari

By Eswari

One thought on ““இனி Pub-க்கு இவங்க போனா அவ்வளவுதான்! ‘நோ என்ட்ரி’ போட்ட அமைச்சர்.. அதிரும் தமிழ்நாடு!””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago