அதிமுகவின் கோட்டையான கொங்கு, மேற்கு மண்டலங்களில் இருந்து கிளம்பியுள்ள புதிய புயல், எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணா ரெட்டி என அதிமுகவின் முக்கிய மாஜிக்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து, நேற்று இபிஎஸ்ஸுக்கு அதிரடியாக ஒரு கடிதத்தை தட்டிவிட்டுள்ளனர்.
இபிஎஸ்ஸை அதிரவைத்த மாஜிக்கள்
அந்தக் கடிதத்தில் விவகாரமே, நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி தராததுதான். “கட்சிப் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பழைய பதவிகளைத் தரவில்லை. நீங்களாகப் பார்த்து, உங்கள் விருப்பப்படி புதிய பொறுப்புகளைப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்த பதவிகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் சாதாரண கட்சி உறுப்பினராகவே இருந்து கொள்கிறோம்” என்று ஓப்பனாகவே எடப்பாடிக்கு செக் வைத்துள்ளனர் மாஜிக்கள். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெக-வின் ‘அமைச்சர்’ அல்வா
மாஜிக்கள் இபிஎஸ்ஸுக்கு எதிராகக் கொடி பிடித்தாலும், இந்த டீமின் முக்கியப் புள்ளியான எஸ்பி வேலுமணி தற்போது வரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் பின்னணித் தகவல்கள் வெளியாகின. “கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 25 எம்.எல்.ஏ.க்களுடன் தவெக ஆட்சிக்கு எஸ்.பி.வேலுமணி அணி ஆதரவு கொடுத்தது. அப்போது சிஎம் விஜய்யே நேரடியாக வந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். வேலுமணியிடம் தனியாகப் பேசும்போது கூட விஜய் மிகவும் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசியிருந்தார்.
இதனால், தவெக அமைச்சரவையில் எப்படியும் தங்களுக்கு 4 முதல் 5 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று வேலுமணி டீம் மலைபோல நம்பியிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ‘அமைச்சர் பதவி இல்லை’ என்று சொல்லி கழற்றிவிட்டுவிட்டது தவெக தலைமை. இது வேலுமணி டீமுக்கு மிகப்பாரிய செட்பேக் ஆகிவிட்டது.
இதனால், “மீண்டும் விஜய்யை நம்பி அதேபோன்ற ஒரு மூவ் எடுப்பது சரியாக இருக்குமா?” என்று வேலுமணி மிகவும் யோசிக்கத் தொடங்கியுள்ளார். ஒருவேளை தவெக-வில் அதிகாரப்பூர்வமாகவே இணைந்துவிட்டால் மாநில அளவில் பெரிய பொறுப்புகள் கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் அது எதிர்கால அரசியலுக்கு கை கொடுக்குமா என்று தனது விசுவாசிகளிடம் தீவிரமாக ஒப்பீனியன் கேட்டு டிஸ்கஷன் செய்து வருகிறாராம் வேலுமணி.
“ஏன் டெல்லி பக்கம் ஒதுங்கக் கூடாது?”
இன்னொரு பக்கம், வேலுமணி டீமுக்குள் ‘பிளான்-B’ குறித்த ஆலோசனைகளும் முளைத்துள்ளன. “நாம் ஏன் தவெக-வை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்? பாஜக இருக்கிறதே… ஒருவேளை பாஜகவில் நமக்கு மாநிலத் தலைவர் பதவி தருவதாக இருந்தால், அங்கு போவதில் என்ன தவறு? மத்தியிலும் மோடிதான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது நமது எதிர்காலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதுதானே? அந்த வழியில் ஏன் நாம் முயற்சிக்கக் கூடாது?” என்ற புதிய விவாதத்தையும் எஸ்.பி.வேலுமணி கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குழப்பத்தில் தமிழக பாஜக சீனியர்கள்
இதுகுறித்து கமலாலய சீனியர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் சில புதிர்களைப் போடுகிறார்கள். “தமிழ்நாட்டில் இப்போது நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், எஸ்.பி.வேலுமணி டீமை நாங்கள் பாஜகவுக்குள் இழுத்தால், நிச்சயமாக அதிமுக – பாஜக கூட்டணி உடனே முறிந்துவிடும். தமிழ்நாட்டில் தற்போதைக்கு எங்களுக்கு வேறு வலுவான பார்ட்னர் யாரும் இல்லை என்பதால், இந்த விவகாரத்தில் டெல்லி மேலிடம் மிகவும் கவனமாகவே காய்களை நகர்த்தும்.
ஆனால், அதே நேரத்தில் பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணிக்குள் இருந்துகொண்டே, கூட்டணிக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களை பாஜக தன் வசம் இழுத்த வரலாறும் உண்டு. கூட்டணி உடையாத அளவுக்கு அதை எப்படி மேனேஜ் செய்ய வேண்டும் என்பதும் டெல்லிக்குத் தெரியும்” என மர்மப் புன்னகையோடு முடிக்கிறார்கள்.
