சிவகங்கை மாவட்டத்தின் அசைக்க முடியாத திமுக கோட்டையாகக் கருதப்பட்ட திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, 2026 தேர்தலில் தமிழக அரசியலே உறைந்து போகும் வகையிலான ஒரு வரலாற்றுச் சம்பவத்திற்குச் சாட்சியாகியுள்ளது. நான்கு முறை தொடர் வெற்றி, இருமுறை அமைச்சர் பதவி எனத் தோல்வியே காணாத தற்போதைய அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை, அரசியலுக்குப் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

கோட்டையும் பின்னணியும்
கடந்த 2006-ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் தொகுதி கே.ஆர். பெரியகருப்பனின் தனிப்பட்ட செல்வாக்கிலும், திமுகவின் பலமான வாக்கு வங்கியிலும் இயங்கி வந்தது. இந்த முறையும் தனது 5-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 2,73,456 மொத்த வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 77.32% வாக்குகள் பதிவாகியிருந்தன.

மூச்சுத்திணற வைத்த வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவியது. அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜக வேட்பாளர் கே.சி. திருமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ரம்யா மோகன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும், பிரதானப் போட்டி அமைச்சருக்கும் சீனிவாச சேதுபதிக்கும் இடையிலேயே இருந்தது.

29-வது சுற்றின் முடிவில் கே.ஆர். பெரியகருப்பன் (திமுக): 83,226 வாக்குகள். சீனிவாச சேதுபதி (தவெக): 83,196 வாக்குகள். என வெறும் 30 வாக்குகள் மட்டுமே திமுக முன்னிலையில் இருந்தது. இந்த 30 வாக்குகள் முன்னிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திருப்பத்தூர் மையத்தின் மீது திரும்பியது.

அந்த ஒரு வாக்கு!
இறுதிச் சுற்றான 30-வது சுற்றின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, தேர்தல் முடிவுகள் அனைவரையும் அதிரவைத்தன. 30 வாக்குகள் முன்னிலையில் இருந்த அமைச்சர் பெரியகருப்பனைப் பின்னுக்குத் தள்ளி, ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ஒரு மூத்த அமைச்சரை, ஒரு அறிமுக வேட்பாளர் அதுவும் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் வீழ்த்தியது திமுக தொண்டர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *