புதுச்சேரி செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவரது இந்த திடீர் கோபத்தின் பின்னணியில், தவெக ஆட்சியில் தன் மகனை அமைச்சராக்க வைகோ போட்ட ‘மாஸ்டர் பிளான்’ தோல்வியடைந்ததே முக்கிய காரணம் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றிருந்தனர். அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு வைகோ அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மீண்டும் தங்களுக்கு தவெக கூட்டணியிலோ அல்லது தனியாகவோ ‘சீட்’ கிடைப்பது நிச்சயம் இல்லாததால், அவர்கள் இருவரும் வைகோவின் கட்டளையை ஏற்க மறுத்துவிட்டனர். அதோடு நில்லாமல், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருதி நேரடியாக திமுக பக்கமே சாய்ந்துவிட்டனர்.
இதன் பின்னணியில் வைகோவின் மிகப்பெரிய வாரிசு அரசியல் கணக்கு ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இரு தொகுதிகளில் ஒன்றில் தனது மகன் துரை வைகோவை களம் இறக்கி, அவரை வெற்றி பெறச் செய்து, முதலமைச்சர் விஜய்யின் தவெக அமைச்சரவையில் ‘அமைச்சர்’ ஆக்க வேண்டும் என்பதே வைகோவின் திட்டமாக இருந்துள்ளது. ஒருவேளை துரை வைகோ அமைச்சராகும் பட்சத்தில், “நாங்கள் திமுக தயவில் பெற்ற திருச்சி எம்பி பதவியைத் தியாகம் செய்துவிட்டுத்தான் தவெக கூட்டணிக்கு வந்தோம்” என்று பெருமையாகக் கூறிக்கொள்ளலாம் என மதிமுக தலைமை கணக்கு போட்டிருந்தது.
ஆனால், மதிமுக எம்.எல்.ஏ-க்களே வைகோவின் இந்த வாரிசு அரசியல் வியூகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு திமுகவில் தஞ்சமடைந்ததால், மொத்த திட்டமும் தலைகீழாக மாறியுள்ளது. இந்த உச்சக்கட்ட அரசியல் ஏமாற்றமும், அசிங்கமுமே புதுச்சேரியில் வைகோவின் கடுமையான டென்ஷனுக்கும் ஆத்திரத்திற்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.
