தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அதிமுக இன்று தன் அடையாளத்தை இழந்து சிதைந்து போயிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் களம் கண்ட அதிமுக, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடத் தக்கவைக்க முடியாமல் தத்தளிப்பது ரத்தத்தின் ரத்தங்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

நாலாபுறமும் சரிந்த வாக்கு வங்கி
அதிமுகவின் பலமாகப் பார்க்கப்பட்ட கொங்கு மண்டலம் முதல், அக்கட்சியின் பாரம்பரியக் கோட்டையான தெற்கு மண்டலம் வரை எங்கும் அதிமுகவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை, டெல்டா, கொங்கு மற்றும் தெற்கு என நான்கு முக்கிய மண்டலங்களிலும் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. கடந்த தேர்தலில் 66 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக வலம் வந்த அதிமுக, தற்போது வெறும் 56 இடங்களுக்குள் சுருங்கிப் போய்விட்டடது.

3, 4வது இடத்தில் அதிமுக

இதுகுறித்து அதிமுகவில் உள்ள சீனியர் ஒருவர் நம்மிடம், ”எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை மோகம், கட்சியைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்தியுள்ளது. அதற்கு இந்தத் தோல்வியே சாட்சி. பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தவெக போன்ற புதிய கட்சிகளின் வரவால், பல இடங்களில் அதிமுக மூன்றாவது, நான்காவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. “இரட்டை இலை” சின்னம் இருந்தும், மக்களிடம் நம்பிக்கையைப் பெறத் தவறியது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல்.

தொடர் தோல்விகள்
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா என சொந்தக் கட்சி நிர்வாகிகளையே ஒருங்கிணைக்கத் தவறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் ஆதரவையும் இழந்து நிற்கிறார். நானே தலைமை என்று மார்தட்டிய எடப்பாடியால், நேற்று வந்த கட்சியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை. கூட்டணி வியூகங்களில் ஏற்பட்ட குளறுபடிகள், உட்கட்சிப் பூசல், தெளிவற்ற நிலைப்பாடு ஆகியவையே அதிமுகவை இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளன.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் ஆபத்து
தமிழக அரசியலில் திமுக – அதிமுக என்ற இருமுனைப் போட்டி நிலவி வந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது இந்தத் தேர்தல். ஒரு காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, இன்று 50 இடங்களைக் கூடத் தாண்ட முடியாமல் திணறுவது, அந்தக் கட்சி மெல்ல மெல்லத் தன் அரசியல் முகவரியை இழந்து வருவதையே காட்டுகிறது. இந்தத் தோல்வி எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பாடம் மட்டுமல்ல, அவரது அரசியல் எதிர்காலத்திற்கே விடப்பட்ட எச்சரிக்கை மணி” என்கிறார் கொந்தளிப்புடன்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *