தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே “ஊழல் ஒழிப்பில் சமரசம் இல்லை” என்பதைத் தன் பிரதான ஆயுதமாகத் கையில் எடுத்து வருகிறார் முதல்வர் விஜய். முந்தைய ஆட்சிக்காலங்களில் பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீது கடும் சட்டம் பாயும் என்று அவர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், தற்போது கோட்டை வட்டாரத்தில் இருந்து கசிந்திருக்கும் ஒரு ரகசியத் தகவல் தமிழக அரசியலை அதிர வைத்துள்ளது.
திமுகவின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் தாங்கிப் பிடிக்கும் 7 முக்கியத் தூண்களை ஒரே நேரத்தில் குறிவைத்து, அவர்களின் மீதான ஊழல் ஆதாரங்களைத் திரட்டும் பணி உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
5 மண்டலங்களையும் முடக்கும் வியூகம்?
திமுகவை ஐந்து மண்டலங்கப் பிரித்து, அந்தந்தப் பகுதிகளில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் ‘டாப் 7’ முகங்களை இந்த முதன்மைப் பட்டியல் உள்ளடக்கியுள்ளது. தமிழகத்தின் திசைகள் வாரியாக, தற்போதைய ஆளுங்கட்சியின் ரேடாரில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் அந்த 7 விஐபிக்களில் கிழக்கு மண்டலம். திருச்சி கே.என்.நேரு டெல்டா மற்றும் கிழக்கு மண்டலத்தின் அசைக்க முடியாத தளபதி. முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர். மேற்கு மண்டலம் கோவை செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் திமுகவின் தேர்தல் எந்திரமாகச் செயல்பட்டவர். முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர்.
வடக்கு மண்டலம், திருவண்ணாமலை எ.வ.வேலு வட மாவட்டங்களின் முக்கிய முகம். முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் உள்ளவர் .தெற்கு மண்டலம், மதுரை மூர்த்தி, தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சீனியர்கள். முன்னாள் வணிகவரி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள். தலைநகரம், சேகர்பாபு. சென்னையில் திமுகவின் கோட்டையைக் காக்கும் ‘மிரட்டல்’ வியூகவாதி; முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திமுகவின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
கவனமாக நகர்த்தப்படும் காய்
இந்த 7 பேரும் வெறும் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, திமுகவின் அந்தந்த மாவட்ட மற்றும் மண்டலங்களின் நிதியாதாரமாகவும், தேர்தல் வியூக வகுப்பாளர்களாகவும் இருப்பவர்கள். இவர்களை ஒரே நேரத்தில் சட்ட ரீதியாக முடக்கினால், திமுகவின் களப்பணி பலவீனமடையும் என்பதை விஜய் அரசு நன்றாகவே கணக்குப் போட்டுள்ளது. அதனால்தான், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றத்தில் தப்ப முடியாத அளவுக்கு வழக்கு, முறைகேடு புகார்கள் சார்ந்த ஆவணங்கள், ஆதாரங்களை மிகத் துல்லியமாகத் திரட்டும் பணி ரகசியமாக முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. எந்த நேரத்திலும் இவர்களின் மீது சட்டம் தன் கடமையைச் செய்யப் பாயலாம் என அறிவாலய வட்டாரங்கள் கலக்கத்தில் இருக்கின்றன.
முன்னாள் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் முதல்வர் விஜய் பேசி வருவது, இந்த ‘ஆபரேஷனுக்கான’ முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.”ஊழல் அற்ற நிர்வாகம்” என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிரூபிக்கவும், அதே நேரத்தில் எதிர்க்கட்சியின் தேர்தல் கட்டமைப்பைச் சிதைக்கவும் முதல்வர் விஜய் கையில் எடுத்துள்ள இந்த ‘ஊழல் ஒழிப்பு அஸ்திரம்’ தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பப் போகிறது என்பது மட்டும் உறுதி! எந்தத் திசையில் இருந்து முதலில் சம்மட்டி அடி விழப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
