தவெக-மதிமுக கூட்டணி புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அதிரடி முடிவு வைகோவை நிலைகுலையச் செய்துள்ளது.
மதிமுக சார்பில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களான செல்வன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைக்க மதிமுக தலைமை திட்டமிட்டிருந்தது. அதன் மூலம் காலியாகும் அந்தத் தொகுதிகளில், தவெக-வின் முழு ஆதரவோடு மதிமுகவை மீண்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்வதுதான் வைகோவின் ஸ்கெட்ச் ஆக இருந்தது. ஆனால், இந்த வியூகத்திற்கு அந்த இரு எம்.எல்.ஏ-க்களும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
சின்னம் மாறி நின்றால் பதவி பறிபோகும் என்ற சட்டச் சிக்கலாலோ அல்லது திமுகவின் அரசியல் பிடியாலோ, அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன்வரவில்லை. மாறாக, உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் தாங்கள் திமுகவிலேயே தொடரப் போவதாக அதிரடி முடிவெடுத்தனர்.
தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களே தங்களின் திட்டத்திற்குத் துரோகம் இழைத்ததால் வேதனையடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “விலகிச் சென்றவர்களை விமர்சிப்பது என் வழக்கமல்ல. எங்கிருந்தாலும் எம்.எல்.ஏ-க்கள் செல்வன், ராஜேந்திரன் வாழ்க. அவர்கள் என் முதுகில் குத்தவில்லை; என் நெஞ்சில்தான் குத்திவிட்டார்கள்” என உருக்கமாகக் குமுறியுள்ளார்.
சுயநலத்திற்காகத் தடம் மாறிய தலைவர்களைக் கடந்து, உயிரைக் கொடுக்கும் அடிமட்டத் தொண்டர்களே கட்சியைத் தாங்கிப் பிடிப்பார்கள். வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப் போவதில்லை” என்றும் அறிவித்துள்ளார்.
