தமிழக அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்திருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உணர்ச்சிகரமான அலையை உருவாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதன் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் தவெக தலைவர் விஜய் தோல்வியடைந்து விடுவார் என்ற வதந்திகளும், சில ஊடகங்களின் கணிப்புகளும் மகேந்திரனைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. தவெக தான் ஆட்சியைப் பிடிக்கும், விஜய் தான் முதலமைச்சர் ஆவார் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் அசாத்திய நம்பிக்கையில் இருக்கும் சூழலில், அதற்கு மாறாகச் சில தகவல்கள் வெளியானதால் அவர் மனமுடைந்துள்ளார்.

இந்த அதீத அச்சத்தின் காரணமாக, மகேந்திரன் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை மீட்டு, உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் (GH) அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
அரசியலில் வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம் அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யலாம். ஏன், 40 முதல் 50 இடங்கள் மட்டுமே பெற்று ‘கிங் மேக்கராக’ கூட மாற வாய்ப்புள்ளது. எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுப்பது தீர்வாகாது.
விஜய்யின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்க வேண்டிய ரசிகர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள், நிதானத்தோடும் துணிச்சலோடும் முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
