Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் , கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வானம் பார்த்த பூமியாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், வைகை மற்றும் குண்டாறு போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பல பகுதிகளில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கோடை மற்றும் வறட்சி காலங்களில் அந்தத் திட்டமும் போதுமானதாக இல்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பல இடங்களில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டுச்சிகுளம் கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்திற்கு காவிரி குடிநீர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை கொண்டிருப்பதால் அதை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "இனி மண்டபத்துல 'மகிழ்ச்சி'க்கு டபுள் காசு: ₹30 லட்சமாக உயர்ந்த மதுபான உரிமக் கட்டணம்!"

இதனால், கிராம மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக ஊரணி மட்டுமே உள்ளது. அதே ஊரணியில் மனிதர்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் அருந்துவதால், அந்த நீர் சுகாதாரமற்றதாக மாறியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினமும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஆண்களும் பெண்களும் தள்ளுவண்டிகளுடன் ஊரணிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். பாசி படர்ந்த அந்த நீரை வடிகட்டி, காய்ச்சி சமையல் மற்றும் குடிநீராக பயன்படுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கூலி வேலை செய்து வாழும் தங்களால், ஒரு குடம் குடிநீரை 20 ரூபாய் கொடுத்து வாங்குவது சாத்தியமில்லை என்றும், சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு அடிக்கடி உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  "சரித்திரம் படைத்த சாமானியன்… கோட்டையின் புதிய நாயகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!"

குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், சுகாதாரமான குடிநீரை வழங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளான சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago