சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் மரப்பொருள் நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
நிறுவனத்தில் மரப்பலகைகள், மரக்கதவுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிக அளவில் இருந்ததால், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது.
மேலும், தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால், வீடுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் ஏராளமான மரப்பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
