Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாயுவை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம், கண் எரிச்சல், மேலும் வாய் மற்றும் மூக்கில் ரத்தக் கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கான காரணங்களை முழுமையாகக் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமோனியா வாயு கசிவு போன்ற அவசரச் சூழ்நிலைகளில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாயு கசிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக காற்றின் திசைக்கு எதிர் திசையில் உள்ள திறந்தவெளி அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மூக்கு மற்றும் வாயை சுத்தமான ஈரமான துணியால் மூடிக்கொள்ள வேண்டும். கண்களில் எரிச்சல் ஏற்பட்டால், சுத்தமான நீரால் கண்களை நன்றாகக் கழுவ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை தாமதமின்றி அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago