தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு நாட்களுக்கு மொத்தம் 40 ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை முதலே ஏராளமான பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டிய பூங்கா வளாகத்திற்கு முன்பாகவே குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் காத்திருந்தனர்.
பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று மற்றும் நாளை தலா 20 ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி வழங்கப்படவிருந்தது. இதில் காலை முதல் மதியம் 1 மணி வரை 10 ஆயிரம் பேருக்கும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மேலும் 10 ஆயிரம் பேருக்கும் என இரண்டு கட்டங்களாக, முழுமையாக ஆன்லைன் மூலமாக பூஜ்ய கட்டணத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ஆன்லைன் முன்பதிவு செய்யாத சிலர், நேரில் வந்து கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று உள்ளே செல்லலாம் என்ற நம்பிக்கையில் உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு, பணம் செலுத்தினாலும் அனுமதி வழங்க முடியாது என நிர்வாகம் தெரிவித்ததுடன், அதுகுறித்த அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பள்ளி விடுமுறை மற்றும் தனிப்பட்ட வேலைகளை ஒதுக்கிவிட்டு, உணவு உள்ளிட்ட பொருட்களுடன் குடும்பமாக வந்துள்ளோம் என்றும், பணம் செலுத்த தயாராக இருந்தும் அனுமதி மறுக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இதனையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவு வசதியை மட்டுமே வழங்கி, நேரடி டிக்கெட் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஆன்லைன் முன்பதிவு குறித்து தெளிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அனைவருக்கும் எளிதாக கிடைக்காத நிலையில், திடீரென முழுமையாக ஆன்லைன் முறையை மட்டுமே பின்பற்றியதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
