தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைதான். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த முதல்வர், கடுமையான அதிருப்தியிலும் கடுப்பிலும் இருப்பதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
அதற்குக் காரணம், இந்த வெள்ளை அறிக்கையில் எந்தவொரு புதிய தகவலும் இல்லை என்பதுதான். “கடந்த ஆட்சியில் எங்கேயெல்லாம் தேவையற்ற செலவுகள் நடந்தன, எந்தெந்தத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திட்டமிட்டு வீணடிக்கப்பட்டது” என்ற மிக முக்கியமான விவரங்கள் ஏதுமே இதில் இடம்பெறவில்லை. வெறும் பொதுவான புள்ளிவிவரங்களை மட்டுமே வைத்து பக்கங்களை நிரப்பியிருப்பதுதான் முதல்வரின் கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை
இதன் பின்னணியை விசாரித்தபோதுதான் அதிர்ச்சிகரமான சில உண்மைகள் மேலிடத்திற்குத் தெரியவந்துள்ளது. கடந்த கால நிதித்துறையில் நடந்த பெரும் முறைகேடுகள், ஊழல்கள் அப்பட்டமாக அம்பலமானால், அதில் தற்போதும் அதே துறையில் நீடிக்கும் சில உயர் அதிகாரிகளும் சிக்க நேரிடும் என்ற பயம் பரவியுள்ளது. “நாம் மாட்டிக்கொள்வோம்” என்ற தற்காப்பு அச்சத்தின் காரணமாகவே, சில முக்கிய அதிகாரிகள் முறையான மற்றும் துல்லியமான தகவல்களைத் திரட்டித் தராமல் இழுத்தடித்துள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சருக்குத் தெரிந்தே இது நடந்ததா அல்லது அதிகாரிகள் அவரை ஏமாற்றினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சொத்து விவரங்களை நோண்டும் உளவுத்துறை
விவரங்களை மறைத்து, வெள்ளை அறிக்கையை ‘டம்மி’ ஆக்கிய அதிகாரிகளின் தில்லுமுல்லு ஆட்டம் ஆட்சி மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மேலிடம், தற்போதும் முந்தைய ஆட்சியின் விசுவாசிகளாகச் செயல்பட்டு வரும் அந்த அதிகாரிகளுக்குக் கட்டம் கட்டத் தொடங்கிவிட்டது.
தகவல்களைத் தராத அந்த குறிப்பிட்ட அதிகாரிகளின் பின்னணி என்ன, அவர்களின் முந்தைய கால செயல்பாடுகள் எப்படி இருந்தன, மற்றும் அவர்களின் தற்போதைய சொத்து விவரங்கள் என்னென்ன என்பது குறித்து ரகசியமாக முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளதாம். விரைவில் நிதித்துறையில் பெரிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலான ‘களைெடுப்பு’ மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
