Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நிறுவப்பட உள்ள பிரம்மாண்ட மகாத்மா காந்தி வெண்கலச் சிலை, புதுச்சேரியில் தயாராகி வருகிறது.

பிரான்ஸ் தென்னிந்திய நலவாழ்வு சங்கம், அங்குள்ள தமிழ் கலாசார அமைப்புகள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் முயற்சியால், அமைதி மற்றும் சர்வதேச நல்லுறவைப் பறைசாற்றும் வகையில் இந்தச் சிலை நிறுவப்பட உள்ளது.

சங்கத்தின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாரீஸ் அருகே உள்ள மோந்த்ரோ நகரில் இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

எட்டு அடி உயரம் கொண்ட இந்த வெண்கலச் சிலையை உருவாக்கும் பணிகள், புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கனுவாப்பேட்டையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கனுவாப்பேட்டையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி, தனது குழுவினருடன் இணைந்து சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சுமார் ஒரு டன் எடையுள்ள இந்தச் சிலைக்கான முதற்கட்ட பணியாக ஆயிரம் கிலோ களிமண்ணைக் கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  "சீருடைக்கு முன்னால் மத அடையாளங்களுக்கு இடமில்லை!" ஹிஜாப் வழக்கில் நீதிமன்றம் போட்ட அதிரடி முற்றுப்புள்ளி!

பின்னர் பிளாஸ்டர் அச்சு மற்றும் மெழுகு வடிவமைப்பு முறைகள் மூலம் சுமார் 600 கிலோ எடையுள்ள வெண்கலச் சிலை உருவாக்கப்படும். ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிலை விமானம் மூலம் பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நிறுவும் பணிகள் நிறைவடைந்த பிறகு, அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் திறந்து வைக்கப்பட உள்ளது” என்றார்.

இந்தச் சிலை, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை முன்மாதிரியாகக் கொண்டு, கூடுதல் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பகுதியில், அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்படுவது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

மேலும், புதுச்சேரியின் கைவினை மற்றும் சிற்பக் கலைத் திறமையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் மற்றொரு பெருமைமிக்க அடையாளமாகவும் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago