நாட்டில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்களுக்காக இந்தியாவின் முன்னணி வங்கிகள் கடந்த 2025-26 நிதியாண்டில் மொத்தமாக ரூ.3,877 கோடி செலவிட்டுள்ளன.
முதலீட்டுத் தளமான Groww வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தச் செலவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ.986.4 கோடி செலவழித்து முதலிடத்தில் உள்ளது. இது அந்த வங்கியின் மொத்த நிகர லாபத்தில் 1.22 சதவீதமாகும்.
அடுத்ததாக, HDFC வங்கி ரூ.922.5 கோடி செலவழித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது அந்த வங்கியின் நிகர லாபத்தில் 1.26 சதவீதமாகும்.
அதேவேளை, ICICI வங்கி அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்களுக்காக ரூ.318.5 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. இது அதன் நிகர லாபத்தில் 0.58 சதவீதமாகும்.
டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்திலும், வங்கிகளில் படிவங்கள், காசோலைப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ரூ.3,877 கோடி என்பது எஸ்பிஐ வங்கி மட்டும் செய்த செலவு அல்ல; இந்தியாவின் அனைத்து முன்னணி வங்கிகளும் இணைந்து 2025-26 நிதியாண்டில் அச்சிடுதல் மற்றும் எழுதுபொருட்களுக்காக மேற்கொண்ட மொத்த செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
