https://republictn.com/

தமிழக முதலமைச்சர் விஜய்யை நடிகர் விஷால் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, வழக்கமாக வழங்கப்படும் சால்வை மற்றும் பூங்கொத்துகளுக்காக செலவிடப்படும் தொகையை சமூக நல உதவியாக மாற்றும் தனது நடைமுறையை அவர் தொடர்ந்தார்.

நடிகர் விஷால் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மூன்று ஏழை மாணவிகளின் கல்லூரிக் கல்விக்கான முழுச் செலவையும் முதலமைச்சர் விஜய்யின் பெயரிலேயே ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கான விவரங்கள் அடங்கிய கடிதத்தை அவர் முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்.

பொதுவாக முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் போது சால்வை, பூங்கொத்து போன்ற மரியாதை பரிசுகளை வழங்குவதைத் தவிர்த்து, அந்தத் தொகையை ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிடுவதை விஷால் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பிலும் அதே நடைமுறையை பின்பற்றியுள்ளார்.

இந்த உதவித்தொகையின் மூலம் பயன் பெறும் மூன்று மாணவிகளில் ஒருவர் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தினக்கூலித் தொழிலாளியின் மகள் ஆவார். இம்மூவரும் தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாகும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது” என்று முதலமைச்சர் விஜய்யை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள விஷால், லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்த காலம் முதலே விஜய்யை தாம் “டார்லிங்” என்று அழைத்து வருவதாகவும், இன்று அவரது பதவி உயர்ந்திருந்தாலும் அவர்களுக்கிடையேயான அன்பும் நட்பும் மாறவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago