”அதிகார பகிர்வு வழங்கக் மறுத்தவர்களின் வருத்தப்பாடுதான். தவெக ஆட்சியின் மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என திமுக மீது புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகம்- புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அவர்களுடைய எதிரியை சரியாக மதிப்பீடு செய்யவில்லை. இதுதான் அவர்களுடைய தோல்விக்கு காரணம். புதுச்சேரியில் திமுகவை எதிர்த்து எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதோ அந்த தொகுதியில் எல்லாம் திமுக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோன்று எந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லையோ, அந்த தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. புதுச்சேரியில் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் திமுக பேசியது காங்கிரஸ் கட்சிக்கே தெரியாது. அவர்களுடன் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் எப்படி ஒரு அங்கமாக இருந்ததோ அதே போன்றுதான் புதுச்சேரியில் ஒரு அங்கமாக இருந்தது. தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமியை நம்பி வாக்களித்த மக்கள், ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். தொகுதி மக்களை இந்த அரசாங்கம் முழுமையாக ஏமாற்றி உள்ளது.
தமிழக அரசு இன்னும் முழுமையாக செயல்பட தொடங்கவில்லை. செயல்பாடுகள் இருக்கும் போது குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருப்பு சட்டையில் கருப்பு மை வைத்தால் தெரியாது. அதே வெள்ளை சட்டையாக இருக்கும்போது தெரிந்துவிடும். அது போன்றுதான் தவெக ஆட்சி.
தமிழக அரசின் செயல்பாடு முழுமையாக தவறு என்று சொல்ல முடியாது. முயற்சி எடுக்கிறார்கள். அந்த முயற்சிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். 50 ஆண்டுகாலம் காங்கிரசுக்கு அதிகார பகிர்வை வழங்கக் கூடாது என்று மறுக்கப்பட்டவர்களின் வருத்தப்பாடுதான் தவெக அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.
நாங்கள் மட்டும்தான் ஆட்சி செய்வோம் யாருக்கும் பகிர்வு கிடையாது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் எல்லோரும் ஆட்சி செய்வோம் என்ற ஒரு நிலை மாறி உள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் நாங்கள் பங்கு தருகிறோம் என்று கூப்பிடுகின்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீது குதிரை ஏறிதான் திமுக வெற்றி பெற்றது. அதிகாரத்தை பங்கிட்டு கொள்வதற்கு காங்கிரஸ் எப்போதுமே தயாராக உள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட கட்சிகளுமே ”ஆட்சி எங்களிடம்… வந்தீர்கள் என்றால் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி சென்று விட வேண்டும்” என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் இருந்தார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
-சக்திவேல், சிறப்பு நிருபர், புதுச்சேரி
