நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவிற்குள் அதிரடி மோதல்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம், “உடனே பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட வேண்டும். தோல்விக்குக் காரணம் ஆராயப்பட வேண்டும்” என எடப்பாடிக்கு எதிராகக் குரல் எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி. சண்முகத்தின் அரசியல் வரலாற்றையும், அவரது செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.
“வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணையோடுதான் அதிமுக வென்றது” என்று சி.வி. சண்முகம் பேசியதற்கு அந்த நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அப்படியென்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில் வலுவான பாமக கூட்டணியோடு களம் இறங்கியும், விழுப்புரம் தொகுதியில் சி.வி. சண்முகம் ஏன் தோற்றுப் போனார்? அதிமுகவில் இருந்து முன்பே நீக்கப்பட்ட லட்சுமணன் என்பவரிடம் சி.வி. சண்முகம் தோற்றதைச் சுட்டிக்காட்டி, “விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோற்றதற்கு சி.வி. சண்முகத்தின் தன்னிச்சையான போக்கே காரணம்” எனக் குற்றம் சாட்டினார்.
சி.வி. சண்முகத்தின் தற்போதைய அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கொடுத்ததுதான் என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சி.வி. சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு, அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர், கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவிகளை வழங்கியது அண்ணன் எடப்பாடியார் தான்.

2021-ல் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப் போய் நின்றபோது, எடப்பாடியாரிடம் கெஞ்சிக் கேட்டு வற்புறுத்தியதால் தான் அவருக்கு ‘நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்’ பதவி வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இன்று கட்சித் தலைமைக்கு எதிராகச் சண்முகம் பேசுவது நன்றிகெட்டத்தனம். முதலமைச்சராக இருந்தபோதும் சரி, தற்பொழுது பொதுச்செயலாளராக இருக்கும்போதும் சரி, இபிஎஸ்-இன் மகனை எந்தவொரு அரசு அல்லது கட்சி நிகழ்ச்சிகளிலும் யாரும் பார்த்ததே இல்லை. ஏன், இங்குள்ள எம்.எல்.ஏக்கள் கூட அவரை நேரில் பார்த்ததில்லை.
ஆனால், விழுப்புரத்தில் சி.வி. சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் தான் அந்த மாவட்டத்தின் ‘குறுநில மன்னர்’ போலச் செயல்பட்டு நிஜமான குடும்ப அரசியல் நடத்துகிறார். சண்முகத்தையும் அவரது சகோதரரையும் மீறி பொதுச்செயலாளரைச் சந்திக்கும் நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்களின் சீட் பறிக்கப்படுகிறது. சண்முகம் பரிந்துரைத்து இபிஎஸால் அறிவிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் 3 பேர் (விழுப்புரம், வானூர், திண்டிவனம்) தோற்றதற்கு சண்முகத்தின் அண்ணன் நடத்திய குறுநில ஆட்சிதான் காரணம்.
“உடனே பொதுக்குழுவைக் கூட்டு” எனச் சண்முகம் பிடிவாதம் பிடிப்பதன் பின்னால் சுயநலம் இருக்கிறது. செயற்குழுவில் உள்ள 175-200 பேரில் சி.வி. சண்முகம் போன்ற முன்கோபிகளான 5 அல்லது 10 பேர் மட்டும்தான் பேச முடியும். 3000 பேர் கொண்ட பொதுக்குழுவில் மேடையில் இருக்கும் தலைவர்கள் மட்டுமே பேச முடியும், அடிமட்டத் தொண்டனின் குரல் கேட்காது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அடிமட்டத் தொண்டர்களின் உண்மையான கருத்துக்களை அறிய விரும்புகிறார். அதனால்தான், கடந்த ஜூன் 13 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3 மணி நேரம் ஆலோசித்து, தோல்விக்கான காரணங்களை அடிமட்டத்திலிருந்து குறிப்பெடுத்துள்ளார். அனைத்து மாவட்டக் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே, முறைப்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டப்பட்டு சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இபிஎஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாகத் தொண்டர்களை நேரில் சந்தித்து வரும் வேளையில், சி.வி. சண்முகம் போன்ற சீனியர்களின் அவசர அழுத்தங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, வட மாவட்டங்களில் அதிமுகவிற்குள் மேலும் பிளவை உண்டாக்குமோ என்ற அச்சத்தைத் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
