Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் திரள வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பெங்களூருவில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என்பதற்காக, நாங்கள் எங்கள் வேலையை விட்டுவிட்டு வீதிக்கு வந்து போராட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்க  இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலினும் ஒருவர்!" -  CJP நிறுவனர் அபிஜித் தீப்கே!

மேலும், ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை விமர்சித்த அவர், இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் கனவுகளுக்காகவும் பழைய தலைமுறையினர் வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போராடும் இளைஞர்களை “அர்பன் நக்சல்கள்”, “பாகிஸ்தானியர்கள்” அல்லது “கரப்பான் பூச்சிகள்” என்று முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை இழிவுபடுத்துவதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் அமைதியாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகப் பேசினார்.

இதனிடையே, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே பேசுகையில், சீர்குலைந்த கல்வி அமைப்பை கேள்வி எழுப்பும் போதெல்லாம் தங்களை அதிகார வர்க்கத்தினர் “கரப்பான் பூச்சிகள்” என்று இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், எதிர்காலத்தில் மருத்துவர்களாகி பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், வரும் 20ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தில் இந்தியா முழுவதுமுள்ள மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்தார்.

இதையும் படியுங்க  பாஜகவில் இருந்து ஏன் விலகினேன்..? டெல்லி பாஜக-வின் ஆணவத்தை புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago