https://republictn.com/

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டான “கிரீன் மேஜிக்” பால் வினியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து நுகர்வோருக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான “கிரீன் மேஜிக்” பால் வினியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் “கிரீன் மேஜிக்” பாலும் உட்பட, வழக்கம்போல தொடர்ந்து வினியோகம் செய்து வருவதாகவும், எந்த ஒரு பால் வகையின் வினியோகமும் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் தொடர்ந்து தாராளமாகக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் தேவைக்கேற்ப பல்வேறு கொழுப்புச்சத்து அளவுகளில் ஆவின் நிறுவனம் பாலை வினியோகம் செய்து வருகிறது. அதன்படி, நீல நிற பாக்கெட்டில் வழங்கப்படும் டோன்ட் மில்க் (Toned Milk) 3 சதவீத கொழுப்புச்சத்தைக் கொண்டதாகும்.

பச்சை நிற பாக்கெட்டில் வழங்கப்படும் ஸ்டாண்டர்டைஸ்டு மில்க் (Standardized Milk) அல்லது கிரீன் மேஜிக் பால் 4.5 சதவீத கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வழங்கப்படும் புல் கிரீம் மில்க் (Full Cream Milk) 6 சதவீத கொழுப்புச்சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்களும் ஆவின் நுகர்வோர்களும் இதுபோன்ற தவறான வதந்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என்றும், கிரீன் மேஜிக் பால் உள்ளிட்ட அனைத்து பால் வகைகளும் வழக்கம்போல தொடர்ந்து கிடைக்கும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago