”பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதல்வர் விஜய் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார்” என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியது, ”நான் ஏற்கெனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகாலம் நடைபெற்ற நம்முடைய திராவிட மாடல் ஆட்சியே மகளிருக்கான ஆட்சிதான் என்பதைப் பற்றி, இங்கே எனக்கு முன்பு தலைமையேற்றுப் பேசிய கனிமொழி குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தான விடியல் பயணத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று ஏராளமான புதுமையான திட்டங்களை நாம்தான் உருவாக்கினோம். அது மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என்று பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட பெண்களுக்குத்தான் நிறைய வாக்குறுதிகள் நாம் கொடுத்தோம். குறிப்பாக, 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கிற இல்லத்தரசி திட்டம், அதுமட்டுமா, உரிமைத்தொகை உயர்வு என்று நிறைய இருக்கின்றன.
ஆனால், இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள்; ஓட்டு போடாதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் நிலை.
சாதாரணமாக சொல்கிறார்கள், “ஏதோ இரண்டு ஓட்டு போட்டோம். நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள் என்று நினைத்தோம். இப்படி ஆகிவிட்டதே”. இப்போது இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டன. நியூஸ் சேனல்களை வைத்தாலே, கொடூரமான குற்றச் சம்பவங்கள்தான் செய்திகளாக வருகின்றன. எனக்கு முன்பு பேசிய கனிமொழி சொன்னார்கள், சமீபத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அந்தக் கட்சியினரே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. நேற்று கூட, ஆலந்தூரிலும், சேலத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன.
தேர்தலுக்கு முன்பு இன்றைக்கு இருக்கும் முதல்வர் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு பற்றித்தான் தொடர்ந்து பேசினார். இன்னொன்றும் சொன்னார். “எங்கு நல்ல விஷயம் நடந்தாலும் அது நம்ம பசங்கதான் செய்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால் இன்றைய நிலை என்ன?. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரச்சாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது.
பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள்? ஆடைகள் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதல்வர் என்ன செய்கிறார் தெரியுமா? அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. எம்எல்ஏ-க்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.
கொஞ்சம் யோசித்துக் பாருங்கள். ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத்தான் வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளும் இவர்களது வெற்றிக்காக உழைக்கிறார்கள். இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதல்வர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா?. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
