“மாற்றத்தை நோக்கி… தூய ஆட்சியை நோக்கி…” என்ற முழக்கத்தோடு தமிழகத்தில் புதிய விடியல் பிறக்கும் என நம்பிய மக்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறையில் தற்பொழுது அரங்கேறி வரும் ‘வசூல் வேட்டை’ பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. கடந்த ஆட்சியில் கூட இல்லாத அளவிற்கு, இந்த ‘தூய ஆட்சியில்’ கலெக்ஷன் பாதை அகலத் திறந்துவிடப்பட்டிருப்பது வெட்கக்கேடானது!
தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட திட்ட இயக்குநர்களின் (Project Directors) இடமாறுதல் பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக, மாவட்டத்தின் முக்கியத்துவத்திற்கும் அதன் நிதி புழக்கத்தின் தன்மைக்கும் ஏற்ப, தலா 10 லட்சத்தில் தொடங்கி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை பகிரங்கமாகப் பேரம் பேசி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக அதிரடிப் புகார்கள் எழுந்துள்ளன.
இங்குதான் சாமானிய மக்களின் நியாயமான கேள்வி எழுகிறது; இப்படி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, அநியாய வழியில் தங்களுக்குச் சாதகமான இடங்களுக்கு மாற்றலாகி வரும் அதிகாரிகள், எப்படி மக்களுக்கு நேர்மையான நிர்வாகத்தைத் தருவார்கள்? அவர்கள் முதலில் தாங்கள் கொடுத்த லஞ்சப் பணத்தை வட்டியும் முதலுமாகச் சம்பாதிக்கத்தானே பார்ப்பார்கள்? அப்படியென்றால், இந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எப்படி ஏழை எளியோரைச் சென்றடையும்?
இதற்கெல்லாம் மேலாக, இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் முன்னின்று முழு வசூல் வேட்டையையும் நடத்தியுள்ளார் என்ற தகவல் கோட்டை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது. ‘தூய ஆட்சி’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, கூடவே இருக்கும் கூட்டணி அமைச்சரே இப்படித் துறையைச் சீரழிப்பது அடுக்காது. இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் ஷாஜகான் தவெகவின் தூய பிம்பத்தை சீரழிப்பது அடுக்கவே அடுக்காது என குமுறுகிறார்கள் அத்துறை அதிகாரிகள்.
முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக, நேரடியாகத் தலையிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையின் இந்த இடமாறுதல் பேரத்தை உடனடியாக நிறுத்தி வைத்து, விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் கூட்டணி அமைச்சராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து, மக்கள் மத்தியில் தன் ஆட்சியின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதலமைச்சருக்கு இப்போது உள்ளது.
