பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிதாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, தனது முதல் வழக்கிலேயே அதிரடி காட்டி குற்றவாளியைக் கைது செய்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை உடனடியாகப் பிடித்து சிறையிலடைத்து, இச்சிறப்புப் படை தங்களின் அதிரடித் தொடக்கத்தை அரங்கேற்றியுள்ளது.
சென்னை அயனாவரம் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற இளைஞர், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். தாகத்திற்குத் தண்ணீர் கேட்பது போல நடித்து, தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்டு பயந்த சுரேஷ், அந்தப் பெண்ணைக் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
புகார் பெற்ற சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தப்பியோட முயன்ற சுரேஷை அதே பகுதியில் வளைத்துப் பிடித்த சிறப்புப் படையினர், அவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ படை, தங்களின் முதல் வழக்கிலேயே காட்டிய இந்த மின்னல் வேகச் செயல்பாடு பொதுமக்களிடையேயும், குறிப்பாகப் பெண்களிடையேயும் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
