Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக, மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கேள்விக்குறியாகியுள்ளன. இதன் விளைவாக, நகராட்சிப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களான மண் அணை, மனோரஞ்சிதம் நீர்த்தேக்கம் மற்றும் குண்டாறு நீர்த்தேக்கம் ஆகிய மூன்றிலும் போதிய மழை பெய்யாததால், அவை முற்றிலும் வறண்டு மண்திட்டுகளாகக் காட்சியளிக்கின்றன.

நகராட்சியின் குடிநீர் தேக்கங்கள் மற்றும் மனோரஞ்சிதம் அணைப் பகுதிகள் முறையான திட்டமிடல் இன்றி அவசரகதியில் மேம்படுத்தப்பட்டதால், கோடைக்காலங்களில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோடை மற்றும் விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவதால், நகரின் தினசரி குடிநீர் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களின் தண்ணீர் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மேலும், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர் கலப்பதால், அவை மாசடைந்து துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  ”விமானத்துக்குள் மல்யுத்தம் போல மோதல் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!”

அணைகள் வற்றியுள்ளதால், ஜிம்கானா மைதானப் பகுதி மற்றும் ஏரியைச் சுற்றியுள்ள நகராட்சி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தற்காலிகத் தீர்வாக, பூம்பாறை அருகே உள்ள கீழ்க் குண்டாறு பகுதியிலிருந்து பம்புகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருவதால், கொடைக்கானல் மலைப்பகுதியின் குடிநீர் தேவையை நீண்டகால அடிப்படையில் பூர்த்தி செய்ய, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை தீவிரப்படுத்துதல், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரித்தல் மற்றும் முறையான குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago