https://republictn.com/

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “உன்னை எனக்குப் பிடிக்கும், ஆனால் உன் நடிப்பு எனக்குப் பிடிக்காது” என்று பாரதிராஜா தன்னிடம் வெளிப்படையாக கூறுவார் என நினைவுகூர்ந்தார். இதை ஒரு நேர்மையான குணமாக அவர் வர்ணித்தார்.

மேலும் பேசிய அவர், “பாரதிராஜா ஒரு குழந்தை போன்ற மனம் கொண்டவர். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகப் பேசும் குணம் அவருக்கு இருந்தது” என்று தெரிவித்தார்.

தன்னுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நட்பு இருந்ததாகக் கூறிய ரஜினிகாந்த், அவருடன் கழித்த நேரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியானவை என்றும் நினைவுகூர்ந்தார்.

ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்குக் கொண்டு சென்று, மண் வாசனையுடன் திரைப்படங்களை உருவாக்கியவர் பாரதிராஜா என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், திரையுலகில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என யாருக்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் குரல் கொடுத்து ஆதரவாக நின்றவர் பாரதிராஜா எனவும் அவர் குறிப்பிட்டார்.

1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘பரட்டை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜாவின் மறைவு, திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago