Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மதுரை மாவட்ட நீதிபதி உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜே.எம்.-5 (JM-V) நீதிமன்றத்தின் நீதிபதி, வழக்கறிஞர்களை அவமரியாதையாகவும், சட்ட நடைமுறைகளுக்கு முரணாகவும் நடத்துவதாக குற்றம்சாட்டி, மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், தங்களது கோரிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த அவர்கள், தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையும் படியுங்க  "கேக் வெட்டுறதுல என்னடா உலகப்போர் ரேஞ்சுக்கு பகை? நெல்லையில் நடந்த விபரீதம்!"

உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகம் முன்பு வந்தபோது, வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். மேலும், பேரிகேடுகள் அமைக்கப்பட்டு உயர்நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவுவாயிலும் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய வழக்கறிஞர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரிகேடுகளை தள்ளிவிட்டு, பிரதான நுழைவுவாயிலை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஒரு பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய வழக்கறிஞர்கள், பிரதான நுழைவுவாயில் முன்பாக சாலையில் திரண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட நீதிபதியை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  சாதனைப் பெண்களுக்குக் கௌரவம்! நவசமாஜ் மகளிர் மேடையின் 3-ஆம் ஆண்டு துவக்க விழா..!

இந்த சம்பவத்தால் உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago