https://republictn.com/

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வருகிறது. இந்த எதிர்பாராத தாமதம், இப்படத்தில் முதலீடு செய்துள்ள விநியோகஸ்தர்கள், பிற பங்குதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திரைத்துறையினர் கூறுகையில், நிலுவையில் உள்ள தடைகள் நீக்கப்பட்ட பிறகு, விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திரும்ப அளித்துவிட்டு, படத்தை வெளியிடுவதற்கான முழுப் பொறுப்பையும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்க பரிசீலித்து வருகிறது என்கின்றனர்.

இம்முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீண்டகால நிதி நிச்சயமற்ற தன்மையிலிருந்து விநியோகஸ்தர்களைப் பாதுகாக்க இது உதவும். ஆனாலும் ரிலீஸில் தாமதம் நீடிப்பதால், இது தயாரிப்பாளருக்கு நிதிச் சுமையையும் அபாயத்தையும் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

விஜய்யின் அபாரமான புகழும்க, வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் சவால்கள் ஏதுமில்லாமல் இல்லை. இப்படம் ஏற்கனவே ‘ரீமேக்’ திரைப்படம் என்ற விவாதங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், பல முக்கிய வெளியீடுகளைப் போலவே, இதுவும் ‘பைரசி’ தொடர்பான இழப்புகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

நீண்ட கால தாமதங்கள் ரசிகர்களின் ஆர்வத்தையும் படத்தின் ஒட்டுமொத்த வணிக வாய்ப்புகளையும் பாதிக்கக்கூடும். இச்சூழலில், கூடிய விரைவில் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவது மிக அவசியமானதாகத் தோன்றுகிறது. விரைவான தீர்வு, தயாரிப்பு நிறுவனத்தின் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பது மட்டுமல்லாமல், படத்தின் மார்க்கெட் மதிப்பையும், ரசிகர்களின் ஆர்வத்தையும் தக்கவைக்க உதவும்.

தகவல்கள் உண்மையாக இருந்தால், சுமூகமான, வெற்றிகரமான ரிலீஸை உறுதிசெய்ய தணிக்கை நடைமுறையை விரைவுபடுத்துவதே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago