நவீன டிஜிட்டல் உலகம் நமக்கு வசதிகளை அள்ளிக் கொடுத்தாலும், அதன் மறுபக்கம் நயவஞ்சகமான கொடூரங்களால் நிறைந்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான எச்சரிக்கை. ஒரு 69 வயது முதியவரின் தனிமையைப் பயன்படுத்தி, ‘டேட்டிங் ஆப்’ மூலம் வலை விரித்து, அவரை நிர்வாணமாக்கி கொள்ளையடித்த கும்பலின் செயல் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாக மாறி பித்தலாட்டம்:

பிஜ்னோர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த வீரேந்திர பட்நகர் என்ற முதியவர்தான் இந்த நயவஞ்சகக் கும்பலின் டார்கெட். ‘பேபி’ என்ற பெயரில் ஒரு டேட்டிங் செயலியில் உலா வந்த போலி ப்ரபைலைக் கண்டு அவர் ஏமாந்துள்ளார். உண்மையில் அந்த ப்ரபைலை இயக்கியது ‘சமீர்’ என்ற இளைஞன். முதியவரின் நம்பிக்கையைப் பெற, அந்தக் கும்பலில் இருந்த பெண்களைக் கொண்டு ஆபாசமாகப் பேச வைத்து, அவரைத் தங்களது ‘ஹனி டிராபியில் விழ வைத்துள்ளனர்.

பாழடைந்த பண்ணை வீட்டில் மரண பயம்
ஏப்ரல் 17, 2026 அன்று, அந்தப் பெண்ணைச் சந்திக்கலாம் என்ற ஆசையில் வீரேந்திர பட்நகர் சென்றார். திட்டமிட்டபடி, மோனிஷ் என்பவர் முதியவரைத் தனது பைக்கில் ஏற்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பாழடைந்த பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் நுழைந்த கணமே, பதுங்கியிருந்த சமீர், அகில், அனாஸ், ஃபர்ஹான் மற்றும் ஃபர்தீன் ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.

அந்த முதியவரை நிலைகுலையச் செய்யும் வகையில் கொடூரமாகத் தாக்கியதோடு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவரிடம் இருந்த தங்க மோதிரம், கழுத்து ஜெயினைப் பறித்த அந்தக் கும்பல், அத்துடன் நிறுத்தாமல் டிஜிட்டல் கொள்ளையிலும் இறங்கியது.

போன் பே மூலம் டிஜிட்டல் கொள்ளை

முதியவரின் கைபேசியை வலுக்கட்டாயமாகப் பறித்த கொள்ளையர்கள், அவரது போன் பே பின் நம்பரை மிரட்டிப் பெற்று, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ₹65,000 பணத்தை மின்னல் வேகத்தில் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றினர். முதியவரின் வயதையோ அல்லது உடல்நிலை குறித்தோ எவ்வித இரக்கமும் காட்டாமல், அவரை முழுமையாகச் சுரண்டியது இந்தக் கும்பல்.

காவல்துறையின் அதிரடி வேட்டை
சம்பவம் நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டவரின் மகன் விஷால் பட்நகர் அளித்த புகாரின் பேரில், பிஜ்நோர் காவல்துறை களத்தில் இறங்கியது. தொழில்நுட்ப ஆதாரங்கள், மொபைல் சிக்னல்களைக் கொண்டு ஆய்வு செய்த காவல்துறையினர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு மோனிஷ், சமீர், அகில் மற்றும் அனாஸ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் ₹42,380 ரொக்கம் மீட்கப்பட்டது. முக்கியக் குற்றவாளி சமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “பணக்கார முதியவர்களை ஹனி டிராபியில் சிக்க வைத்து கொள்ளையடிப்பதே எங்கள் முழுநேரத் தொழில்” என்று திமிராகக் கூறியுள்ளது காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது.

முதியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

டிஜிட்டல் உலகில் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போதும், குறிப்பாக டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும்போதும் முதியவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் தனிமை மற்றவர்களுக்குத் தீனியாகி விடக்கூடாது. தற்போது தலைமறைவாக உள்ள ஃபர்ஹான் மற்றும் ஃபர்தீனைப் பிடிக்க காவல்துறை தீவிர வேட்டை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இணையதளப் பயனாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.

சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகளில் முன்பின் தெரியாதவர்களை நம்புவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை. குற்றவாளிகள் அப்பாவி மக்களின் உணர்வுகளையும், தனிமையையும் சுரண்டி, அவர்களை சட்டவிரோத வலைகளில் சிக்க வைக்கின்றனர். இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிஜ்நோர் காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *