https://republictn.com/

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதன் மூலம், இன்பதுரை அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

மறுவாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்தத் தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்று பொருள் கொள்ள முடியாது என்றும், ஆனால் ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்ததற்கான ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை உரிமையாக கோர முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்பதுரையின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை அப்பாவு வரவேற்றுள்ளார். “இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இறுதியாக நீதி வென்றுள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இத்தனை ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த வேதனைகளுக்கும், நீதிக்காக மேற்கொண்ட போராட்டங்களுக்கும் இன்றைய தீர்ப்பு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும், இறுதியில் நீதி கிடைத்துள்ளது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மைக்கும், நீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டு, என்னை வெற்றியிலிருந்து விலக்கி வைத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது செல்லாது என்று இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கிற்காக எத்தனை முறை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியிருக்கிறோம், எத்தனை முறை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அனைத்து வலிகளுக்கும், காத்திருப்புகளுக்கும் இன்றைய நீதியரசரின் தீர்ப்பு ஒரு சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது” என்றார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago