Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளில் சென்னை விமான நிலையம் பின்தங்கியுள்ளதாக கூறப்படுவதால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக கருதப்பட்ட சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் சுமார் 17,39,000 பயணிகள் வருகை தந்துள்ளனர். அதே நேரத்தில், கொல்கத்தா விமான நிலையத்தில் 17,64,000 பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையை விட பின்தங்கியிருந்த பெங்களூரு விமான நிலையம் தற்போது நாட்டின் மூன்றாவது மிகப் பரபரப்பான விமான நிலையமாக உயர்ந்துள்ளது. மேலும், உள்நாட்டு பயணிகள் வருகையில் மும்பையை கூட முந்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை வெறும் 24 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் இந்த வளர்ச்சி 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "பள்ளி திறக்கும் போதே பறந்த உத்தரவு!" – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கழிப்பறைகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லையெனவும், உணவகங்கள் மற்றும் கடைகள் குறைவாக உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பயணிகள் மட்டுமின்றி தொழில் துறையினரும் பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வசதிகளில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் பின்தங்கியுள்ளதாக தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தை மறுகட்டமைப்பு செய்வது மட்டுமே போதுமான தீர்வாக இருக்காது எனவும், பரந்தூர் புதிய விமான நிலையமே தற்போதைய காலத்தின் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  விமான ஊழியரே கடத்தல்காரனா? சென்னை ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்கிங் சம்பவம்!

ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் சரக்கு கையாளுதல் மற்றும் பயணிகள் வருகை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சென்னையை விட முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சென்னை விமான நிலையம் பின்தங்கி விடாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எவ்வாறு விரைவாக செயல்படுத்துவது, அதன் மாற்று ஏற்பாடுகள் என்ன என்பதற்கான தெளிவான விளக்கத்தை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மேலும் காலதாமதம் செய்யக்கூடாது என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாகும்.

விமான நிலையங்கள் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தை இயக்கும் முக்கிய மையங்களாக இருப்பதாகவும், அவை அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago