Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போகிறதா என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வரும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் மதிமுக நீடித்து வந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் நீடித்து வருகிறது. கடந்த தேர்தல்களில் மதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்பந்தித்தது வைகோவுக்கு கடும் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சியின் அடையாளத்தை இழக்க விரும்பாத மதிமுக நிர்வாகிகள் மத்தியில் இந்த சின்ன அரசியல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேர்தலுக்கு முன்பு வரை நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைக் கடுமையாக விமர்சித்து வந்த வைகோ, சமீபகாலமாக விஜய்க்காகப் பரிந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பாலான மதிமுக நிர்வாகிகள், திமுக கூட்டணியை உதறிவிட்டு விஜய் தலைமையிலான தவெக கூட்டணி வைக்க வேண்டும் என்று வைகோவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  விஜய்யின் ‘டெல்லி டூர்’..! மோடிக்குக் காத்திருக்கும் டிமாண்ட்ஸ்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக தற்போது திமுக கூட்டணியில் தான் தொடர்கிறது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று நிதானம் காட்டியுள்ளார்.

இருப்பினும், சின்ன விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் கட்சி நிர்வாகிகளின் நெருக்குதல் காரணமாக மதிமுக விரைவில் தவெக கூட்டணியில் இணையலாம் என்றே பலத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் ஜூன் 27 பொதுக்குழு கூட்டம், தமிழக திராவிட அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago