Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 25 வயது கவின், சென்னை நகரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை சந்திரசேகர் விவசாயியாகவும், தாய் தவிச்செல்வி ஒட்டப்பிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கவின் பாளையங்கோட்டை பூதியைச் சேர்ந்த காவல் துறையில் உதவி சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளுடன் பள்ளிப் பருவத்திலிருந்து காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் கவினுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் அந்த இளம்பெண்ணின் தம்பியான 22 வயது சுர்ஜித்துக்கு தெரியவந்த நிலையில், அவர் கவினை காதலை கைவிடுமாறு மிரட்டி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மதியம், தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் இருந்து கவின் தனது உடல் நலம் சரியில்லாத தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கவின் காதலித்த இளம்பெண் சித்தா மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  வேலூரில் பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை – குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்..?

மருத்துவமனைக்கு கவின் வந்த தகவல் அறிந்த சுர்ஜித், கவினை தனியாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அஷ்டலட்சுமி நகர் முதல் தெரு பகுதியில் வைத்து மிரட்டியுள்ளார்.

பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினின் கழுத்தில் வெட்டியதாகவும், தப்பி ஓட முயன்றபோது மிளகாய் பொடியை கவினின் கண்களில் வீசியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தப்பி ஓடிய கவினை தொடர்ந்து விரட்டி சென்று சுர்ஜித் கொடூரமாக வெட்டி கொலை செய்ததாகவும், பின்னர் அவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர் சுர்ஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நெல்லை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த ஆணவக் கொலையில் சுர்ஜித்தின் பெற்றோர், பாளையங்கோட்டையில் உதவி சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரே முக்கிய காரணம் என கவினின் தாய் தமிழ்ச்செல்வி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படியுங்க  "கொழுந்துவிட்ட தீ… வெடித்த சிலிண்டர்! நெற்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து!"

அதன் அடிப்படையில், கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், விசாரணை முடிவில் சுர்ஜித்தின் உறவினர் ஜெயபாலன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சுமார் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரியை, இன்று சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது அவர் கதறி அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அதன் பின் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின், கிருஷ்ணகுமாரியை வரும் ஜூன் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க  "நெருப்பாக மாறும் தூங்கா நகரம்! ஆக்ஸ்போர்டு ஆய்வின் பகீர் பின்னணி!"

இதையடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago