https://republictn.com/

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த ட்விஷா ஷர்மா எம்பிஏ பட்டதாரி. அவர் ஒரு பிரபல நிறுவனத்தில் கண்டென்ட் கிரியேட்டராக பணியாற்றி வந்தார். அவரது தந்தை இந்திய ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ட்விஷா தனது 19வது வயதில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று “மிஸ்பூனே” பட்டத்தை வென்றார். மாடலிங் துறையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அவர் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அவர், 2021ல் வெளியான “முக்குரு மொனகலு” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.

2012ல் மிஸ்பூனே பட்டம் பெற்ற பிறகு, பகுதி நேரமாக மாடலிங் செய்துகொண்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் நடிகையாகவும் பணியாற்றி வந்தார்.

2024ஆம் ஆண்டு ட்விஷா ஷர்மாவுக்கு போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவருடன் ஒரு டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது உறவு, நாளடைவில் காதலாக மாறியது. சமர்த் சிங் தன்னை வழக்கறிஞர் என்றும், தனது தாய் ஒரு மதிப்புமிக்க மாவட்ட நீதிபதி என்றும் ட்விஷாவிடம் தெரிவித்துள்ளார். ட்விஷாவும் அவரது பின்னணியை நம்பி காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த இவர்களின் உறவு, திருமணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் 2025 டிசம்பர் 12ஆம் தேதி இவர்களின் திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு ட்விஷா, மத்தியப் பிரதேச மாநிலம் கத்தாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கணவர் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு இந்த மாதம் 12ஆம் தேதி, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கணவர் குடும்பத்தினர் இது தற்கொலை என கூறிய நிலையில், ட்விஷாவின் பெற்றோர் இது கொலை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்விஷாவின் குடும்பத்தின் குற்றச்சாட்டுப்படி, திருமணத்தின் தொடக்கத்தில் சில நாட்கள் மட்டுமே அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் மாமியார் கிரிபாலா சிங் மற்றும் கணவர் சமர்த் சிங் ஆகியோர் தங்களை வெளிப்படுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ட்விஷாவின் பெயரில் இருந்த பியூட்டி பிசினஸ் மற்றும் 20 லட்சம் ரூபாய் வைப்பு தொகையைப் பெற முயன்றதாகவும், அவரது சமூக ஊடக பணிகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ட்விஷா கர்ப்பமாக இருந்த போது அவரது நடத்தையை சந்தேகித்து கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ நாளன்று, ட்விஷா தனது தாயாருக்கு தொலைபேசியில் அழைத்து அழுததாகவும், கணவர் மற்றும் மாமியார் தன்னை தொடர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உரையாடலின் நடுவில் கணவர் அறைக்குள் வந்ததால், அவர் பயத்தில் அழைப்பை துண்டித்துள்ளார்.

அதன்பின்னர், குடும்பத்தினர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, சில நிமிடங்களில் “ட்விஷா தூக்கில் தொங்குகிறார்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை அருகிலிருந்தும், சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த இடைவெளியில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்றொரு புறம், மாமியார் கிரிபாலா சிங் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். ட்விஷாவுக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், கர்ப்பத்தை தானாகவே முடித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ட்விஷாவின் குடும்பம் முழுமையாக மறுத்துள்ளது.

இந்த நிலையில், கணவர் சமர்த் சிங் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை பிடிக்க பரிசுத் தொகையும் அறிவித்துள்ளனர்.

வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் போபாலில் நடந்த பிரேத பரிசோதனையில் சந்தேகம் எழுந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியதால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை தொடங்கிய நிலையில், ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில், மாமியார் கிரிபாலா சிங் முன்ஜாமீன் பெற்றிருந்தார். ஆனால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீனை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதியான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கணவர் மற்றும் மாமியார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விஷா மரணத்தின் உண்மையான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 hours ago at 4 hours ago