Trump Pakistan

பாகிஸ்தானை நம்புவது தற்கொலைக்குச் சமம்

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்காவின் வெளியுறவுத் கொள்கை என்பது எப்போதும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, தெற்காசிய பகுதியில பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையை பல அரசியல் வல்லுநர்கள் ‘ ‘விஷம் நிறைந்த கனியாகவே’ பார்க்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கப் புவிசார் அரசியல் நிபுணர் மைக்கேல் ரூபின், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியஸ்தரா? நயவஞ்சகரா?

‘ ‘வெற்றியின் வாயிலிருந்து தோல்வியைப் பறிப்பது போன்றது பாகிஸ்தானை மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வது” என்ற மைக்கேல் ரூபினின் வார்த்தைகள் மிகக் காரசாரமானவை. பாகிஸ்தானை ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவோ அல்லது மத்தியஸ்தராகவோ கருதுவது, ஒரு மழலையர் பள்ளிக்குக் குழந்தைப் பாலியல் குற்றவாளியைப் பொறுப்பாளராக நியமிப்பது போன்ற ஒரு விபரீதமான செயல்” என்று அவர் சாடியுள்ளார். இந்த ஒப்பீடு பாகிஸ்தானின் மீதான அவரது கடும் அதிருப்தியையும், அந்த நாட்டின் நம்பகத்தன்மையின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

வரலாறு கற்பிக்காத பாடம்

கடந்த கால வரலாறுகளை டிரம்ப் நிர்வாகம் மறந்துவிட்டதை ரூபின் சுட்டிக்காட்டுகிறார். 1930-களில் ஹிட்லருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு, “போரைத் தடுத்துவிட்டேன்” என்று தம்பட்டம் அடித்த பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லேனின் முட்டாள்தனமான முடிவே இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது. இன்று டிரம்ப் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீரைப் புகழ்வதும், அவரோடு கரம் கோர்ப்பதும் அதேபோன்றதொரு ராஜதந்திரத் தோல்விக்கே வழிவகுக்கும் என்பது ரூபினின் வாதம்.

பாகிஸ்தானின் கறைபடிந்த கரங்கள்

பாகிஸ்தான் தொடர்ந்து அமெரிக்காவிற்கு இழைத்து வரும் துரோகங்களை நிபுணர் ரூபின் ஆதாரங்களுடன் அடுக்குகிறார். அதில், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்குப் பின்னால் இருந்த ஏ.கியூ. கானுக்கு புகலிடம் அளித்த நாடு பாகிஸ்தான். உலகமே தேடிய பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைத் தன் மண்ணில் மறைத்து வைத்திருந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுக்கு எதிராகத் தலிபான்கள் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் (IEDs) 80 சதவீதத்திற்கும் அதிகமான மூலப்பொருட்கள் பாகிஸ்தானிய தொழிற்சாலைகளில் இருந்தே வந்தவை.

சுமார் 70% பாகிஸ்தானியர்கள் இன்றும் அமெரிக்காவைத் தங்கள் எதிரியாகவும், பின்லேடனை ஒரு தியாகியாகவுமே பார்க்கிறார்கள் எனும் போது, அந்த நாட்டுடன் நட்புறவு பாராட்டுவது எத்தகைய அறியாமை?

ஆசிம் முனீர்- ஈரானியத் தொடர்பு

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர், ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ஒருபுறம் இஸ்ரேலை ‘புற்றுநோய்’ என்று பாகிஸ்தான் அமைச்சர்கள் வர்ணிக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்கா அவர்களைப் புகழ்வது முரண்பாடுகளின் உச்சம். கத்தார் மூலமாக தலிபான், ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா அடைந்த அதே ‘பேரழிவு’ தான் இப்போதும் நிகழும் என்று ரூபின் எச்சரிக்கிறார்.

அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்து வருகிறது. சித்தாந்த ரீதியாகத் தன்னை எதிரியாகக் கருதும் ஒரு நாட்டை, தனது நலனுக்காகப் பேசும் மத்தியஸ்தராகத் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுகிறது. பாகிஸ்தானை நம்புவதன் மூலம் அமெரிக்கா இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அரசியல் ரீதியாகத் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். டிரம்ப் நிர்வாகம் இந்த “ராஜதந்திரக் கற்பனையில்” இருந்து வெளிவராவிட்டால், அது அமெரிக்காவிற்குப் பெரும் அவமானத்தையும், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்குத் தீனி போடும் செயலையுமே செய்யும்.

மைக்கேல் ரூபினின் இந்த எச்சரிக்கை, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, பயங்கரவாதத்தை வேரோடு அறுக்க நினைக்கும் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிற்குமான ஒரு அபாய எச்சரிக்கை மணி.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *